திருக்குறள் - 1036     அதிகாரம்: 
| Adhikaram: uzhavu

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

குறள் 1036 - திருவள்ளுவர் - ThiruValluvar

"uzhavinaar kaimmatangin illai vizhaivadhooum" Thirukkural 1036 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


உழவை யுடையவர் அத்தொழிலைச் செய்யாது கைம்மடங்கு வராயின், யாதொரு பொருளின்கண்ணும் விரும்புவதனையும் விட்டேமென்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை. எனவே துறவறத்திண்கண் நிற்பாரை நிறுத்துதல் உழவர்கண்ண தென்றவாறு. .

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


உழவினார் கை மடங்கின் - உழுதலையுடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின்; விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை - யாவரும் விழையும் உணவும் யாம் துறந்தேம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா. (உம்மை, இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மையான் தாம் உண்டலும் இல்லறஞ்செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. அவர் உறுப்புமாத்திரமாய கை வாளாவிருப்பின், உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். 'ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தேம் என்பார்க்கு' என உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அதைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


உழவினார் கை மடங்கின்- உழவுத்தொழிலைச் செய்வாரின் கை இதைச் செய்யாது ஓய்ந்திருக்குமாயின்; விழைவதும் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை- மாந்தராற் சிறப்பாக விரும்பப்படும் பெண்ணின்பத்தையுந் துறந்தோம் என்று பெருமை கூறிக்கொள்ளும் துறவியர்க்கும், அவர் அறத்தில் நிற்பது இல்லாமற்போம். உழவுத் தொழில் நிகழாதாயின் உணவில்லை. உணவில்லையெனின் இல்லறம் துறவறம் ஆகிய ஈரறமும் நிகழா என்பதாம். "யாவரும் விழையுமுணவும் யாந்துறந்தே மென்பார்க்கு அவ்வறத்தின்கணிற்றலுமுளவாகா." என்றுரைப்பர் பரிமேலழகர்.உணவும் யாந்துறந்தே மென்பார்க்கு உணவின்மையால் யாதொரு.கேடுமிராதாதலின், அவ்வுரை தன்முரணா யிருத்தல் காண்க. இனி, "யாதொரு பொருளின் கண்ணும் விரும்புவதனையும் விட்டேம் என்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை." என்னும் மணக்குடவ ருரையும், அங்ஙனமே தன் முரணாயிருத்தலாற் பொருந்தாதாம். 'விழைவதூஉம்' இன்னிசை யளபெடை. எனபார்க்கும் என்னும் எச்சவும்மை தொக்கது. இவ்வைந்து குறளாலும் உழவரது சிறப்புக் கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உழவுத் தொழில் செய்யும் உன்னதமானவர்கள் கொடுக்க மறுத்தால் விருப்பத்தை விட்டோழித்தோம் என்கின்ற துறவு மேற்கொள்பவர்களின் நிலை குலைந்து போகும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


உழவர்களின் கை உழாது மடங்கிவிடுமானால், ‘யாவரும் விரும்பும் உண்வையும் கைவிட்டோம்’ என்று துறந்தவர்க்கும், அவ்வறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

Thirukkural in English - English Couplet:


For those who 've left what all men love no place is found,
When they with folded hands remain who till the ground.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If the farmer's hands are slackened, even the ascetic state will fail.

ThiruKural Transliteration:


uzhavinaar kaimmatangin illai vizhaivadhooum
vittaemen paarkkum nilai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore