திருக்குறள் - 362     அதிகாரம்: 
| Adhikaram: avaavaruththal

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

குறள் 362 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vaendungaal vaendum piravaamai matradhu" Thirukkural 362 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்புத் துன்பம் ஆதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும், அது வேண்டாமை வேண்ட வரும் - அப் பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம். (அநாதியாகத் தான் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின் கண்ணேயாகலின், பிறவாமையை வேண்டும் என்றும் ஈண்டைச் சிற்றின்பம் கருதி ஒருபொருளை அவாவின் அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின், அது வேணடாமை வேண்ட வரும் என்றும் கூறினார். பிறவாமையின் சிறப்புக் கூறி, பின் அதுவரும்வழி கூறத்தொடங்குகின்றமையின் 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்பெல்லாந்துன்பமாதலை யறிந்தவன் ஒன்றை விரும்பின் பிறவாமையைத் தான் விரும்புவான்; அது வேண்டாமை வேண்ட வரும் - அப்பிறவாமை ஒரு பொருளின் மேலும் ஆசைகொள்ளாமையை விரும்பி மேற்கொள்ளின் அவனுக்குத்தானே வந்து சேரும். தொடக்கமிலியாகப் பிறப்புப் பிணிமூப்புச் சாக்காட்டால் தொடர்ந்து துன்பமுற்று வருகின்றவனுக்கு இயல்பாகவே பிறவி நீக்கத்தின்மேல் ஆசையுண்டாகு மாதலால், பிறவாமை வேண்டும் என்றார். 'வேண்டும்' செய்யும் என்னும் வினைமுற்று. 'வேண்ட' என்றது வேண்டி மேற்கொள்ளுதலை. 'மற்று' வினைமாற்றிடைச் சொல். இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


பிறப்புத் துன்பத்தினை உணர்ந்தவன் ஒன்றினை விரும்பினால், அவன் பிறவாமை என்பதனையே விரும்புதல் வேண்டும். அவன் ஆசை இல்லாமையை விரும்ப, அவனுக்கு அப்பிரவாமை உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தேவையான பொழுது தேவை எண்ணமற்ற நிலை மற்றபடி தேவையற்றதும் தேவை என்றால் வரும்.

Thirukkural in English - English Couplet:


If desire you feel, freedom from changing birth require!
'I' will come, if you desire to 'scape, set free from all desire.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire.

ThiruKural Transliteration:


vaeNdungaal vaeNdum piRavaamai matradhu
vaeNdaamai vaeNta varum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore