திருக்குறள் - 697     அதிகாரம்: 

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

குறள் 697 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vaetpana solli vinaiyila egngnaandrum" Thirukkural 697 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


எப்போதும் வேந்தனால் விரும்பப்படுவனவற்றைச் சொல்லித் தமக்குப் பயன்படாதவற்றைக் கேட்டாலும் சொல்லாது விடுக. சொல்லாது விடலாவது தூதனை அரசர்க்குப் படை எவ்வளவு உண்டென்று பகையரசன் வினவினால் நீ அறியாததொன்றோ வென்று அளவு கூறாமை.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வேட்பன சொல்லி - பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி; எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல் - எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக. ('வினையில' எனவும், 'கேட்பினும்' எனவும் வந்த சொற்களான், அவற்றின் மறுதலைச் சொற்கள் வருவிக்கப்பட்டன. வினையான் வருதலின் 'வினை' என்றும் வறுமைக்காலமும் அடங்க 'எஞ்ஞான்றும்' என்றும் கூறினார். சொல்லுவனவும் சொல்லாதனவும் வகுத்துக் கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வேட்பன சொல்லி-பெரும்பயன் படுவனவும் அரசன் விரும்புவனவுமான செய்திகளை அவன் கேட்டிலனாயினும் சொல்லி; எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல்-எப்போதும் வினைக்குதவாத வீண் செய்திகளை அவன் கேட்பினும் சொல்லாது விடுக. இதனால், "சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்." (200) என்பது வற்புறுத்தப் பெற்றது. 'வினையில' என்பதனால் வினையுள என்பதும், 'கேட்பினும்' என்பதனால் கேளாவிடினும் என்பதும், மறுதலைச் சொற்களாக வருவிக்கப்பட்டன வினை யென்றது பயன் பாட்டை,'கேட்டல்' சொல்லச் சொல்லுதலும் செவிகொடுத்தலும் ஆகிய இரு செயலும் பற்றியதாம். 'கேட்பினும்' எச்சவும்மை. 'சொல்லா' ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வேண்டியதை சொல்லி, செயல்பட தேவையற்றதை எதன்பொருட்டு கேட்டாலும் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.

Thirukkural in English - English Couplet:


Speak pleasant things, but never utter idle word;
Not though by monarch's ears with pleasure heard.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).

ThiruKural Transliteration:


vaetpana solli vinaiyila eGnGnaandrum
kaetpinum sollaa vidal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore