திருக்குறள் - 13     அதிகாரம்: 
| Adhikaram: vaansirappu

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி.

குறள் 13 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vin indru poippin virineer viyanulakaththu" Thirukkural 13 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும், எல்லாவுயிர்களையும். பொய்த்தல்- தன்றொழில் மறுத்தல். இது பசி என்று பொதுப்படக் கூறியவதனான் மக்களும் விலங்கும் பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


விண் இன்று பொய்ப்பின் - மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் - கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி - நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி. (கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், 'விரி நீர் வியன் உலகத்து' என்றார். உணவு இன்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


விண் இன்று பொய்ப்பின் - வேண்டிய காலத்து மழை பெய்யாது நின்றுவிடுமாயின்; விரிநீர் வியன் உலகத்துள் - பரந்த கடலாற் சூழப்பட்ட அகன்ற நிலவுலகத்தின்கண்; பசிநின்று உடற்றும் - பசி நிலைத்துநின்று உயிர்களை வருத்தும். ஞாலத்தின் (பூமியின்) முக்காற் பங்கு என்றும் வற்றாக் கடலாயினும் அதனாற் பஞ்சக்காலத்திற் பயனில்லையென்பதை, விரிநீர் என்னும் அடைமொழியாற் குறிப்பாக வுணர்த்தினார், வருத்துதலாவது உணவு விளையாமையால் மீண்டும் மழை பெய்யும்வரை கொல்லுதலும் துன்புறுத்துதலும். பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது பெய்யாமை பொய்த்தது போலாயிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மழையானது வேண்டுங் காலத்தில் பெய்யாமல் இருந்துவிட்டால், கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பசியானது நின்று எல்லா உயிர்களையும் துன்புறுத்தும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நீரால் நிறைந்த இந்த உலகத்தில் விண்ணிலிருந்து வரும் நீர் பொய்த்தால் உள்ளிருந்து வாட்டும் பசி.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


மழை காலத்தால் பெய்யாது, பொய்க்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப்பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும்.

Thirukkural in English - English Couplet:


If clouds, that promised rain, deceive, and in the sky remain,
Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.

ThiruKural Transliteration:


ViN indru Poippin Virineer Viyanulakaththu
uLnhin Rudatrum pasi.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore