திருக்குறள் - 471     அதிகாரம்: 
| Adhikaram: valiyaridhal

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

குறள் 471 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vinaivaliyum thanvaliyum maatraan valiyum" Thirukkural 471 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யும் வினையினது வலியும் தனக்கு உண்டான வலியும் பகைவனது வலியும் தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும் எண்ணிப் பின்பு வினைசெய்க. இது வலியறியும் இடம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வினை வலியும் - தான் செய்யக்கருதிய வினைவலியையும், தன் வலியும் - அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும், மாற்றான் வலியும் - அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும், துணைவலியும் - இருவர்க்குந் துணையாவார் வலியையும், தூக்கிச் செயல் - சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க. (இந் நால்வகை வலியுள் வினைவலி அரண் முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி மிகவின்கண் செய்க' என்ற விதியால்,தோற்றல் ஒருதலையாய குறைவின் கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வினைவலியும் - தான் செய்யத்துணிந்த வினைவலியையும் ; தன்வலியும் - அதைச் செய்தற்கிருக்கும் தன் வலியையும் ; மாற்றான் வலியும் - அதை எதிர்க்க வரும் பகைவன் வலியையும் ; துணைவலியும் - இருவர்க்குந் துணையாக வருவார் வலியையும் ; தூக்கிச்செயல் - ஆராய்ந்து பார்த்துத் தன்வலி மிகுமாயின் அவ்வினையைச் செய்க . இந்நால்வகை வலியுள் , வினைவலி படையெடுத்துச் செல்லுதலும் தாக்குதலும் அரண் முற்றுதலும் அதைப்பற்றுதலும் ஆகிய வினைகளாலும் , ஏனை மூன்றும் ஐவகை யாற்றல்களாலும் அளந்தாராயப்படும் . அதன் முடிபாகத் தன்வலி மிகுந்து தோன்றுமாயின் வினைசெய்வதென்று தீர்மானிக்கப்படும் . அஃதன்றிக் குறைந்து தோன்றுமாயின் தோல்வியுறுதியென்றும் , ஒத்துத்தோன்றுமாயின் வெற்றி ஐயுறவான தென்றும் , தெரிந்து வினைகைவிடப்படும் .

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தான் செய்யக் கருதிய தொழிலின் வலிமையினையும், அதனைச் செய்து முடிக்கின்ற தனது வலிமையினையும், பகைவனது வலிமையினையும், இருவர்க்கும் துணையாயினார் வலிமையினையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


செயல்பட தேவைப்படும் ஆற்றல் தனக்கு இருக்கும் ஆற்றல் அடுத்தவரின் ஆற்றல் துணையாக அமையும் ஆற்றல் இவைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

Thirukkural in English - English Couplet:


The force the strife demands, the force he owns, the force of foes,
The force of friends; these should he weigh ere to the war he goes.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act.

ThiruKural Transliteration:


vinaivaliyum thanvaliyum maatraan valiyum
thuNaivaliyum thookkich seyal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore