திருக்குறள் - 1115     அதிகாரம்: 

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

குறள் 1115 - திருவள்ளுவர் - ThiruValluvar

"anichchappook kaalkalaiyaal peydhaal nukappirku" Thirukkural 1115 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அனிச்சப்பூவைக் காம்புகள் அறாது மயிரில் அளைந்தாள்: இனி இவளது நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை. இஃது இடையினது நுண்மை கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(பகற்குறிக்கண் பூ அணி கண்டு சொல்லியது.) அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் - இவள் தன் மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்; நுசுப்பிற்கு நல்ல பறை படா - இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா. (அம் 'முகிழ்ப்பாரம் பொறாமையின் இடை முரியும். முரிந்தால், அதற்குச் செத்தார்க்கு உரிய நெய்தற்பறையே படுவது' என்பதாம். மக்கட்கு உரிய சாக்காடும் பறை படுதலும் இலக்கணக் குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(பகற்குறிக்கட் பூவணிகண்டு சொல்லியது) அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் - இவள் தன் இடை மென்மையை நோக்காது அனிச்சப்பூவைக் காம்பு கிள்ளாமல் தன் தலைக்கணிந்தாள் ; நுசுப்பிற்கு நல்ல பறை படா - ஆகலால் , இனி இவளிடைக்கு மங்கலப் பறைகள் முழங்கா , அமங்கலப் பறைகளே முழங்கும் . அக் காம்பின் கனத்தைக் தாங்கமாட்டாமல் இவள் கொடியிடை ஒடியும் ; ஒடிந்தாற் சாவுநேரும் ; அன்று அமங்கலப்பறை தான் முழங்கும் , சாவு இடை முறிவால் நேர்வதால் , சாப்பறை முழக்கம் இடையை நோக்கியதாகச் சொல்லப்பட்டது , இடை யொடுக்கத்தை மிகுத்துக் காட்டியதால் இஃது உயர்வு நவிற்சியணி ' படாஅ ' இசை நிறையளபெடை , ' பறை ' பால்பகா வஃறிணைப் பெயர் . பகற்குறியாவது பாங்கியிற் கூட்டக் கால்த்திற் பகல் வேளையில் தலைமகனுந் தலைமகளுங் கூடுதற்குக் குறித்த இடம் .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அனிச்சப்பூவை காம்பு களையாமல் பறித்தது போன்ற மென்மையான கழுத்துடையாளுக்கு நல்லதல்ல பறை. ( இசைக்கு ஒடிந்து விடும் மென்மையான கழுத்து இவளுக்கு).

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தன் இடையின் நுண்மையை நினையாதவளாய், அனிச்ச மலரைக் காம்பு களையாமல் கூந்தலிலே சூடியுள்ளாளே! இவள் இடைக்கு இனி நல்ல பறைகள் ஒலிக்கமாட்டா!

Thirukkural in English - English Couplet:


The flowers of the sensitive plant as a girdle around her she placed;
The stems she forgot to nip off; they 'll weigh down the delicate waist.

ThirukKural English Meaning - Couplet -Translation:


No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.

ThiruKural Transliteration:


anichchappook kaalkaLaiyaaL peydhaaL nukappiRku
nalla pataaa paRai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore