திருக்குறள் - 682     அதிகாரம்: 
| Adhikaram: thoodhu

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

குறள் 682 - திருவள்ளுவர் - ThiruValluvar

"anparivu aaraaindha solvanmai thoodhuraippaarkku" Thirukkural 682 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும், தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு - தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; ஆராய்ந்த சொல் வன்மை - அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று. (ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல். 'இன்றியமையாத மூன்று' எனவே அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகை யார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு-தம் அரசனிடத்து அன்புடைமையும்; அறிவு-தம் வினைக்கு அறிய வேண்டியவற்றை அறிந்திருத்தலும்; ஆராய்ந்த சொல் வன்மை-செவிக்கும் உள்ளத்திற்கும் இனியனவும் பொருட் கொழுமையுள்ளனவும் தகுந்தனவுமான சொற்களை ஆராய்ந்தமைத்துக் கூறும் நாவன்மையும்; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று-தூது சொல்வார்க்கு இன்றியமையாத மூன்று திறங்களாம். 'இன்றியமையாத முன்று, எனவே, முன்பு அமைச்சர்க்குக்கூறப் பட்ட பிறவிலக்கணங்களும் வேண்டு மென்பது பெறப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மன்னரிடம் நிறைந்த அன்புடைமையும், அறிவுடைமையும், ஆராய்ந்து சொல்லும் வன்மையும் எனத் தூதுரைப்பார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு, அறிவு, தேர்ந்தெடுத்த வார்த்தைகளை உரைக்கும் திறன், இவைகள் தூது உரைப்பார்க்கு முக்கியமான மூன்று.

Thirukkural in English - English Couplet:


Love, knowledge, power of chosen words, three things,
Should he possess who speaks the words of kings.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.

ThiruKural Transliteration:


anpaRivu aaraaindha solvanmai thoodhuraippaarkku
indri yamaiyaadha moondru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore