திருக்குறள் - 8     அதிகாரம்: 
| Adhikaram: katavul vaazhththu

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
பிற ஆழி நீந்தல் அரிது.

குறள் 8 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aravaazhi andhanan thaalsaerndhaark kallaal" Thirukkural 8 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது மனத்துண்டாங் கவலையை மாற்றுத லரிது. வீடுபெறலாவது அவலக்கவலைக் கையாற்றினீங்கிப் புண்ணிய பாவமென்னுமிரண்டினையுஞ் சாராமற் சாதலும் பிறத்தலுமில்லாத தொரு தன்மையை யெய்துதல். அது பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார். அதனால் எல்லாத் துன்பமும் வருமாதலின்.

பரிமேலழகர் உரை - Thirukkural Meaning in Tamil


அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் - Thirukkural Meaning in Tamil


அறவாழி அந்தணன் - அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்த அருளாளனுமாகிய இறைவனது; தாள் சேர்ந்தார்க் கல்லால் - திருவடியாகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது - அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும். எல்லா அறங்களுந் தொக்கதொகுதி கடல்போற் பரந்ததாதலின், இறைவனை அறவாழியென்றார். பொருளின்பங்களைக் கடலாக வுருவகித்தமையால், அவற்றொடு தொடர்புள்ள அறவாழி என்பது அறக்கடலையன்றிப் புத்தனது தரும சக்கரத்தை யுணர்த்தாது, பிறவாழி கடவாமையாவது பொருளின்ப ஆசையுள் மூழ்கித் துன்புறுதல். இறைவனடி சேர்ந்தவர் அத்துன்பத்தினின்று நீங்கி என்றென்றும் பேரின்பத்தில் திளைப்பர் என்பதாம். அறம் பொருளின்பத்தை ஆழியென்றுருவகித்து இறைவன் திருவடியைப் புணையென்றுருவகியாது விட்டது, ஒருமருங்குருவகம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தனக்கு ஈதாக எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாவனுடைய தாள்களை நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களால் மனத்தில் உண்டாகும் துன்பங்களை நீக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

சிவயோகி சிவக்குமார் விளக்கம்: - Thirukkural Meaning in Tamil


முடிவை புரிந்துகொண்ட இயல்பானவன் நிழல் அடையாவிட்டால் பிறவி அறுப்பது கடினம்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அறக் கடலான அந்தணனின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறர்க்கு இன்பமும் பொருளும் ஆகிய கடல்களைக் கடத்தல் இயலாது.

Thirukkural in English - English Couplet:


Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,
'Tis hard the further bank of being's changeful sea to attain

ThirukKural English Meaning - Couplet -Translation:


None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue

ThiruKural Transliteration:


aRavaazhi andhaNan ThaaLsaerndhaark Kallaal
PiRavaazhi neendhal aridhu

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore