திருக்குறள் - 842     அதிகாரம்: 
| Adhikaram: pullarivaanmai

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.

குறள் 842 - திருவள்ளுவர் - ThiruValluvar

"arivilaan nenjuvandhu eedhal piridhiyaadhum" Thirukkural 842 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவில்லாதான் அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன்; அதுவேயன்றித் தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளுவன். சோரவிடுதல்- பிறர்க்குச் சொல்லுதல். இது பொருட்கேடும் உயிர்க்கேடும் தானே செய்யுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் - புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனம் உவந்து ஒன்று கொடுத்தல் கூடிற்றாயின்; பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை - அதற்குக் காரணம் பெறுகின்றவன் நல்வினையே, வேறொன்றும் இல்லை. (ஒரோ வழி நெஞ்சு உவந்து ஈதல் கூடலின் 'புல்லறிவாளரும் நல்வினை செய்ப' என்பார்க்குப் 'பெறுவான் வீழ் பொருள் எய்தியான் போல்வதல்லது, இம்மை நோக்கியாக மறுமை நோக்கியாக ஈகின்றார் அல்லர்' எனக் கூறியவாறு. கூடிற்றாயின், அதற்குக் காரணம் என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. இதனான், அஃதுடையார் தம்மாட்டு நல்லன செய்தலறியாமை கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவு இலான் நெஞ்சு உவந்து ஈதல்-புல்லறிவாளன் ஒருவனுக்கு ஒருபொருளை மனமகிழ்ந்து கொடுத்தல் நேரின்; பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை--அதற்குக் கரணியம் பெறுகின்றவன் செய்த முன்னை நல்வினையே யன்றி வேறொன்றுமன்று. புல்லறிவாளரும் ஏதேனுமொரு சமையம் பிறர்க்கு நெஞ்சாரக் கொடுத்துதவுகின்றனரே யெனின், அவ்வுதவி பெறுகின்றவர் அவ்வுதவியைத் தம்முன்னை நல்வினைப் பயனாகக் கண்டெடுத்த பொருள்போற் பெறுகின்றனரேயன்றி, அப்புல்லறிவாளர் இயல்பான ஈகைத்தன்மையாலாவது இம்மைப் புகழும் மறுமை நல்வாழ்வும் நோக்கிய அறவினையாகவாவது அவ்வுதவியைச் செய்கின்றாரல்லர் எனக்கரணியங் காட்டியவாறு. நேரின், அதற்குக் கரணியம் என்னுஞ் சொற்கள் அவாய்நிலையான் வந்தன.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவு இல்லாதவர் மனம் விரும்பி கொடுப்பதற்கு காரணம் பெறுபவரின் தவத்தன்மையே அன்றி வேறு ஒரு காரணம் இல்லை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அறிவில்லாத ஒருவன், மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவானது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை.

Thirukkural in English - English Couplet:


The gift of foolish man, with willing heart bestowed, is nought,
But blessing by receiver's penance bought.

ThirukKural English Meaning - Couplet -Translation:


(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth).

ThiruKural Transliteration:


aRivilaan nenjuvandhu eedhal piRidhiyaadhum
illai peRuvaan thavam.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore