திருக்குறள் - 254     அதிகாரம்: 
| Adhikaram: pulaanmaruththal

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

குறள் 254 - திருவள்ளுவர் - ThiruValluvar

"arulalla thiyaadhenir kollaamai koaral" Thirukkural 254 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அருளல்லது யாதெனின், கொல்லாமையைச் சிதைத்தல்; பொருளல்லது யாதெனின் அவ்வூனைத் தின்றல். இஃது அதனை யுண்டதால் அருள் கெடுதலேயன்றிப் பெறுவதொரு பயனுமில்லை என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அருள் யாது எனின் கொல்லாமை - அருள் யாது எனின், கொல்லாமை : அல்லது (யாதெனின்) கோறல் - அருள் அல்லது யாது எனின் கோறல்: அவ்வூன் தினல் பொருள் அல்லது - ஆகலான் அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம். (உபசாரவழக்கால் 'கொல்லாமை, கோறல்' ஆகிய காரியங்களை 'அருள் அல்லது' எனக் காரணங்கள் ஆக்கியும் 'ஊன் தின்கை' ஆகிய காரணத்தைப் 'பாவம்' எனக் காரிய மாக்கியும் கூறினார். அருளல்லது - கொடுமை. சிறப்புப்பற்றி அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் பொருள் அல்லது எனப்பட்டது. 'கோறல்' என முன் நின்றமையின் 'அவ்வூன்' என்றார். இனி இதனை இவ்வாறன்றி 'அருளல்லது' என்பதனை ஒன்றாக்கிக், 'கொல்லாமை கோறல்' என்பதற்குக் 'கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல்' என்று உரைப்பாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அருள் யாது எனின் கொல்லாமை-அருள் என்பது என்னது எனின் கொல்லாமை; அல்லது (யாது எனின்) கோறல்-அருளல்லாதது எதுவெனின் கொல்லுதல் ; அவ்வூன் தினல் பொருள் அல்லது-ஆதலால், அக்கொல்லுதலால் வந்த ஊனைத் தின்பது கரிசு (பாவம்). கொல்லாமை கோறல் ஆகிய கருமகங்களை (காரியங்களை) அருள் அல்லது எனக் கரணகங்களாக (காரணகங்களாக)க் கூறியது சார்ச்சி (உபசார) வழக்கு. அறமும் பொருளெனப்படுவதால் அறமல்லாத கரிசைப் பொருளல்லது என்றார். அவ்வூன் என்ற சேய்மைச் சுட்டு முன்னின்ற கோறலைத் தழுவியது. மணக்குடவர் முதலடியை நிரனிறையாகப் பகுக்காது ஆற்றொழுக்காகக் கொண்டு "அருளல்லது யாதெனின் கொல்லாமையைச் சிதைத்தல்", என்று பொருள் கூறுவர்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அருள் யாது என்று கேட்டால் கொல்லாமையேயாகும். அருள் அல்லாதது யாது என்றால் கொலை செய்வதேயாகும். கொன்ற ஊனைத் தின்னுதல் தீமையாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அருள் அற்றது எது என்றால் உயிர்களை அழிக்காமல் இருப்பதை அழிப்பது பொருள் அற்றது அந்த உடல் உண்ணுவது.

Thirukkural in English - English Couplet:


'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill';
To eat dead flesh can never worthy end fulfil.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life).

ThiruKural Transliteration:


aruLalla thiyaadheniR kollaamai koaRal
poruLalla thavvoon thinal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore