திருக்குறள் - 167     அதிகாரம்: 
| Adhikaram: azhukkaaraamai

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

குறள் 167 - திருவள்ளுவர் - ThiruValluvar

"avviththu azhukkaaru udaiyaanaich cheyyaval" Thirukkural 167 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அழுக்காறு உடையானை - பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் - திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி.மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கொடுவித்துஅழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அழுக்காறு உடையானை-பிறராக்கங் கண்டவிடத்துப் பொறாமை கொள்பவனை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டி விடும்-செங்கோலத்தினளாகிய திருமகள் தானும் பொறாது தன் அக்கையாகிய மூதேவிக்குக் காட்டி விட்டு நீங்கும். அவ்வை அக்கை. தம் அவ்வை தவ்வை; தம் அக்கை தமக்கை என்பது போல. திருமகளின் அக்கை வறுமைக்குத் தெய்வமாதலின், அவளுக்குக் காட்டுதல் என்பது இரண்டாம் வேற்றுமையுருபு நாலாம் வேற்றுமைப் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம். 'விடும்' என்பது இங்குத் தலைமையாய் வந்த தனிவினை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


பிறருடைய செல்வம் கண்டபோது பொறாமைப் படுகின்றவனைப் பார்த்துத் திருமகள் தானும் பொறாமல் தனக்கு மூத்தவளைக் காட்டி அவனிடம் சென்று இருக்குமாறு செய்வாள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆர்வமுடன் அழுக்கு மனம் (பொறாமை) உடையவனை செயல்களின் நாயாகி தன் ஆற்றலை காட்டி விடும்.

Thirukkural in English - English Couplet:


From envious man good fortune's goddess turns away,
Grudging him good, and points him out misfortune's prey.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.

ThiruKural Transliteration:


avviththu azhukkaaRu udaiyaanaich cheyyavaL
thavvaiyaik kaatti vidum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore