திருக்குறள் - 1298     அதிகாரம்: 
| Adhikaram: nenjotupulaththal

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

குறள் 1298 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ellin ilivaam endru enni avarthiram" Thirukkural 1298 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அவர் திறத்தைத் தானும் இகழ்ந்தால் அதனானே தனக்கு இளிவரவு உளவாகக் கருதி நினையாநின்றது சாவமாட்டாத நெஞ்சு?. இது தலைமகள் நெஞ்சு அவரைப்போலத் தானும் இகழலாயிருக்க, இகழா நின்றதுமில்லை: அவர் செயலைக் கேளாது சாவவும் வல்லுகின்றதில்லை யென்று அதனோடு புலந்து கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) உயிர்க் காதல் நெஞ்சு - உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு; எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி -நம்மை எள்ளிச் சென்றார் என்று நாமும் எள்ளுவேமாயின் பின் நமக்கு இளிவாம் என்று கருதி; அவர் திறம் உள்ளும் - அவர் திறத்தினையே நினையாநின்றது. (எள்ளுதல் - வாயில் மறுத்தல். இளிவு - வழிபடாமையானும், பிரிவாற்றாமையானும் , நாணும் நிறையும் முதலிய இழத்தலானும் உளதாவது. திறம் - வாயில் நேர்தலும் வருதலும் கூடலும் முதலாயின. இளிவிற்கு அஞ்சுதலானும் இறந்துபட மாட்டாமையானும் கூடக் கருதாநின்றது என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) உயிர்க் காதல் நெஞ்சு-உயிர்மேற் காதலையுடைய என் உள்ளம் ; எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி-நம்மைப் பொருட்படுத்தாது சென்றாரென்று நம் கணவரை நாமும் பொருட்படுத்தாதிருப் போமாயின் பின் நமக்கு இழிவாம் என்று கருதி ; அவர் திறம் உள்ளும்-அவர் பக்கமே நினைக்கும். எள்ளுதல் வாயில் மறுத்தல்,அஃதாவது தலைமகள் புலவியைத் தீர்க்குமாறு தலைமகன் விடுத்த தோழி , பாங்கன் , பாணன் , புலவன் முதலியோரை ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்தல் . இளிவு ,பணியாமையாலும் பிரிவாற்றாமையாலும் அழகும்நிறையும் நாணும் இழத்தலாலும் நேர்வது , திறம் , வாயில் நேர்தலும் புலவிதீர்தலும் கூடலும் முதலியன. இளிவிற் கஞ்சுதலாலும் இறந்து படமாட்டாமையாலும் கூடக் கருதுகின்ற தென்பதாம் . இறந்து படவிரும்பாமை ' உயிர்க்காதல் நெஞ்சு' என்றதால் அறியப்படும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நகைப்பது இகழ்வானது என்று எண்ணி அவரது திறத்தை உள்ளத்தில் அசைபோடுகிறது உயிர்க்காதல் கொண்ட என் நெஞ்சு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘பிரிந்த கொடுமையாளரை இகழ்ந்தால் இழிவாகும்’ என்று நினைத்து, அவர் மேல் உயிர் போலக் காதல் கொண்ட என் நெஞ்சம், அவரது உயர் பண்புகளையே நினைக்கிறதே!

Thirukkural in English - English Couplet:


If I contemn him, then disgrace awaits me evermore;
My soul that seeks to live his virtues numbers o'er.

ThirukKural English Meaning - Couplet -Translation:


My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.

ThiruKural Transliteration:


ellin ilivaam-endru enni avarthiram
ullum uyirkkaadhal nenju.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore