திருக்குறள் - 1262     அதிகாரம்: 
| Adhikaram: avarvayinvidhumpal

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

குறள் 1262 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ilangizhaai indru marappin en thoalmael" Thirukkural 1262 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இலங்கிய இழையையுடையவளே! யான் இன்று அவரை மறப்பேனாயின் பண்டை மெல்லிய என்னுடைய தோள்கள் தம்மழகினை நீக்கி வளை முதலான அணிகலங்களையும் கழலவிடும். இலங்கிழாய் என்றவதனால் வருத்தமில்லாதவளே என்று விளித்தாளென்பது கொள்ளப்படும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(ஆற்றாமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலை யல்லை; சிறிது மறக்கல் வேண்டும், என்ற தோழிக்குச் சொல்லியது.) இலங்கு இழாய் - விளங்காநின்ற இழையினை யுடையாய்; இன்று மறப்பின் - காதலரை இன்று யான் மறப்பேனாயின்; மேல் காரிகை நீத்து என்தோள் கலங்கழியும் - மேலும் காரிகை என்னை நீப்ப என் தோள்கள் வளை கழல்வனவாம். ('இலங்கிழாய்' என்பது 'இதற்கு நீ யாதும் பரியலை' என்னும் குறிப்பிற்று. இன்று - யான் இறந்துபடுகின்ற இன்று. மேலும் - மறுபிறப்பினும். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நீப்ப' என்பது , 'நீத்து' எனத் திரிந்து நின்றது. கழியும் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. 'இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை எய்தி இன்புறலாம், அதனான் மறக்கற்பாலேன் அல்லேன'்,என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(ஆற்றாமை மிகுதலின் இடையறாது நினைத்தல் தகாது. சிறிது மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது). இலங்கு இழாய்- விளங்குகின்ற அணிகளையணிந்த தோழியே!; இன்று மறப்பின்- காதலரை இன்று மறப்பேனாயின்; காரிகை நீத்து- என் அழகு நீங்கி; என் தோள் மேல் கலங் கழியும்- என் தோள்களின் மேலுள்ள கடகங்கள் கழன்று விடும். 'இலங்கிழாய்' என்பது உன் அணிகள் போன்றனவல்ல என் அணிகள் என்னுங் குறிப்பினது. பரிமேலழகர் 'நீத்து' என்பதை நீப்ப எனத் திரித்தும், 'மேல்' என்பதைக் 'காரிகை' என்னுஞ் சொற்கு முன் நிறுத்தியும், "காதலரை யானிறந்து படுகின்ற, இன்று மறப்பேனாயின் மறு பிறப்பினுங், காரிகை யென்னை நீப்ப என் றோள்கள் வளை கழல்வனவாம். இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை யெய்தி யின்புறலாம்; அதனான் மறக்கற் பாலே னல்லேன்." என்று உரை கூறுவர். இங்ஙனம் வலிந்தும் நலிந்தும் கூறும் கொண்டு கூட்டுப் பொருட்கோளுரை அத்துணைச் சிறந்த தன்று.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறுபிள்ளை போல் இன்று மறந்திருத்தாலும் என் தோள் மேல் உள்ள அழகு நீர்த்து அழிகின்றது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தோழி! அவரைப் பிரிந்து வருந்திருக்கும் இன்றைக்கும், அவரை மறந்தால், என் தோள்கள் அழகுகெட்டு மெலியும்; என் தோள் அணிகளும் கழலும்படி நேர்ந்துவிடும்.

Thirukkural in English - English Couplet:


O thou with gleaming jewels decked, could I forget for this one day,
Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away.

ThirukKural English Meaning - Couplet -Translation:


O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.

ThiruKural Transliteration:


ilangizhaai indru marappin-en thoalmael
kalangazhiyum kaarikai neeththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore