திருக்குறள் - 130     அதிகாரம்: 
| Adhikaram: atakkamutaimai

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

குறள் 130 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kadhangaaththuk katratangal aatruvaan sevvi" Thirukkural 130 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு, அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும். இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி - மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை, அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெற்றியின்கண் சென்று. (அடங்குதல் - மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி - தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி முகங்கள் இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கற்றுக் கதம் காத்து அடங்கல் ஆற்றுவான் செவ்வி - அறநூல்களைக் கற்றறிந்து சினம் வராமற் காத்து அடங்கி யொழுக வல்லவனின் செவ்விய மனநிலையை ; அறம் ஆற்றின் நுழைந்து பார்க்கும் - அறத்தெய்வம் அவனைத் தலைக்கூடுமாறு அவனையடையும் வழிச்சென்று நுணுகி நோக்கும் . செவ்வியாவது ஒருவரைக் கண்டுரையாடுதற் கேற்ற இனிய மனநிலை . செவ்வையான நிலை செவ்வி . அறத்தெய்வம் அவனைக் கண்டு பாராட்டி மகிழ்தற்குச் சமயம் பார்க்கும் என்றது , அந்த அளவிற்கு அவன் அடக்கமுடைமையிற் சிறந்தவன் என்பதை உணர்த்தற்கு. " நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை " (தொல் . 857)

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


கோபத்தினை அடக்கிக் காத்துக் கல்வி பெற்றவனாகிய அடங்கி இருப்பதில் ஆற்றல் உள்ளவனாக இருப்பவனது காலத்தினை, அறமானது அவனை அடையும் வழியிலே புகுந்து, பார்த்து இருக்கும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


முடிவை முன்னிறுத்தி கற்று அடங்கி நடப்பவன் இடத்தில் அறமும் வழி பார்த்து நுழையும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


சினத்தைக் காத்து, கல்வி கற்று, அடங்கி வாழ்தலையும் மேற்கொள்பவனின் செவ்வியை, அவன் வழியில் சென்று அறமானது பார்த்திருக்கும்.

Thirukkural in English - English Couplet:


Who learns restraint, and guards his soul from wrath,
Virtue, a timely aid, attends his path.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger.

ThiruKural Transliteration:


kadhangaaththuk katratangal aatruvaan sevvi
aRampaarkkum aatrin nuzhaindhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore