திருக்குறள் - 1053     அதிகாரம்: 
| Adhikaram: iravu

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.

குறள் 1053 - திருவள்ளுவர் - ThiruValluvar

"karappilaa nenjin katanarivaar munnhindru" Thirukkural 1053 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும் ஓரழகுடைத்து. இஃது ஒப்புரவறிவார் மாட்டு இரத்தலா மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் - கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்; ஓர் ஏஎர் உடைத்து - நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து. ('சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' (குறள்-963) என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல், சொல்லுதலுற்று உரைக்கலாகாமைக்கு ஏதுவாய அதன் இயல்பினை அறிதல். அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே அமைதலின், 'முன் நின்று' என்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎருடைத்து' என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் -கரத்த லில்லா நெஞ்சினையுடைய கடமையறிவார் முன்நின்று அவரிடத்து இரத்தலும்; ஓர் ஏர் உடைத்து-இரப்போர்க்கு ஓர் அழகுடையதாம். கடனறிவார் இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்காத கடமையுணாச்சியாளார், உம்மை இழிவு சிறப்பு. ஏஎர் இசைநிறையளபெடை . சுருங்கிய கண்ணும் மழுங்கிய முகமும் ஒடுங்கியவுடலும் வளைந்த முதுகும் தளர்ந்த நிலையும் இளிவந்த சொல்லுமின்றி, மிளிர்ந்த கண்ணும் மலர்ந்த முகமுங் கொண்டு ஏக்கழுத்துமாய் எக்களித்து நிற்கும் நிலையை ஏர் என்றார்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வெறுப்பு இல்லாத நெஞ்சத்தின் கடன் எது என்று அறிந்தவர் முன் சென்று இரப்பதும் ஓர் அழுகானதே.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஒளிப்பதறியாத நெஞ்சமுடைய மானம் அறிபவரின் முன்னே போய் நின்று, அவரிடம் ஒரு பொருளை இரந்தாலும், அப்படி இரப்பதும் வறியவர்க்கு ஓர் அழகு ஆகும்.

Thirukkural in English - English Couplet:


The men who nought deny, but know what's due, before their face
To stand as suppliants affords especial grace.

ThirukKural English Meaning - Couplet -Translation:


There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars).

ThiruKural Transliteration:


karappilaa nenjin katanaRivaar munnhindru
irappumoa raeer udaiththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore