திருக்குறள் - 1056     அதிகாரம்: 
| Adhikaram: iravu

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

குறள் 1056 - திருவள்ளுவர் - ThiruValluvar

"karappitumpai yillaaraik kaanin nirappidumpai" Thirukkural 1056 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கரப்பிடும்பை இல்லாதரைக் காண்பாராயின், நிரப்பினான் ஆகிய இடும்பை யெல்லாம் ஒருங்கு கெடும். கரப்பிடும்பை யில்லார் என்றமையால் இது செல்வராயினார் மாட்டு இரக்க லாகா தென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் - உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - மானம்விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும். ('கரத்தல்', ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனை 'நோய்' என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர் கழியுவகையராவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு கெடும்' என்றும் கூறினார். இடும்பை - ஆகுபெயர். 'முழுதும் கெடும்' என்று பாடம் ஓதி 'எஞ்சாமற் கெடும்' என்று உரைப்பாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கரப்பு இடும்பை இல்லாரைக் காணின்-தம்மிடத்துள்ளதைக் கரத்தலாகிய நோயில்லாதவரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்-தன்மானத்தை விடாது இரப்போருக்கு வறுமையால் வருந்துன்பமெல்லாம் ஒருசேரத் தொலையும். கரத்தல் மறுமை யின்பத்திற் கேதுவான மன நலத்தைக் கெடுத்தலால், அதை நோய் என்றார், நோய் இடும்பைவகைகளுள் ஒன்றாதலின், இடும்பை இங்குநோய் எனப்பட்டது, கரவாதவரைக் கண்டமட்டில் மகிழ்ச்சி பொங்குதலால் ’எல்லாம் ஒருங்கு கெடும்.’ என்றார். காலிங்கர் ’முழுதுங் கெடும்’ என்னும் பாடங் கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கொடுப்பதற்கு வெறுப்பற்றவரைக் காண்பதால் துன்பத்தில் நிரப்பும் எல்லாம் ஒட்டு மொத்தமாய் அழியும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


உள்ளதை ஒளிக்கும் மனநோய் இல்லாதவரைக் கண்டால், மானம் விடாமல் இரப்பவருக்கு, அவர் வறுமைத் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே அவரை விட்டுப் போய்விடும்.

Thirukkural in English - English Couplet:


It those you find from evil of 'denial' free,
At once all plague of poverty will flee.

ThirukKural English Meaning - Couplet -Translation:


All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.

ThiruKural Transliteration:


karappitumpai yillaaraik kaaNin nirappidumpai
ellaam orungu kedum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore