திருக்குறள் - 758     அதிகாரம்: 
| Adhikaram: porulseyalvakai

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

குறள் 758 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kundraeri yaanaippoar kantatraal than kaiththondru" Thirukkural 758 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


குன்றின்மேல் ஏறியிருந்து யானையோடு யானை போர் செய்தலைக் கண்டாற் போலும். தன் கையகத்து எய்திய பொருளுண்டாக ஒரு வினையை யெடுத்துக் கொண்டு தொடங்கினவன் செய்யும் வினை. இது பொருளுடையார் தாம் வருந்தாமல் பிறரை வினைசெய்வாராக ஏவி வினைக்கண் விட்டிருக்கலாமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை - தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று - ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும். ('கைத்து உண்டாக ஒன்று செய்வான' எனக் கூட்டுக. 'ஒன்று'என்பது வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம்.குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமதுபோலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும்என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை-தன் கையிற் பொருளை வைத்துக்கொண்டு ஒரு வினையை மேற்கொண்டவன் அதைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்ட அற்று-ஒருவன் மலைமேலேறியிருந்து அடிவாரத்தில் நடக்கும் யானைப்போரைக் கண்டாற் போலும். செய்வான் என்னும் வினையால், 'ஒன்று' என்பது அதன் செயப்படுபொருளான வினை யென்பது பெறப்பட்டது. மலைமேலேறியிருந்தான் சிறிதும் அச்சமும் வருத்தமுமின்றிக் கீழ் நடக்கும் யானைப் போரைக் கண்டு களித்தாற்போல, நிரம்பச் செல்வமுள்ளவனும் சிறிதும் அச்சமும் வருத்தமுமின்றித் தக்காரைக் கொண்டு ஒரு பெருவினையைச் செய்து முடித்து மகிழ்வான் என்பதாம். பொது மக்கள் சேவற்போரும் தகர்ப்போரும் கண்டு களித்தது போன்றே, பண்டையரசரும் யானைப்போர்கண்டு களித்தமை, "கஞ்சுகம் வாய்த்த கவளந்தன் கைக்கொண்ட குஞ்சரம் வென்ற கொலைவேழம்-துஞ்சா துழலையும் பாய்ந்திறுத் தோடாது தான்றன் நிழலையுந் தான்சுளிக்கும் நின்று." என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளால் (350) அறியப்படும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


குன்றின் மேல் நின்று யானையின் சண்டையை காண்பதைப் போன்று ஆபத்தில்லாதது தன் உழைப்பால் தான்உயரச் செய்யும் செயல்.

Thirukkural in English - English Couplet:


As one to view the strife of elephants who takes his stand,
On hill he's climbed, is he who works with money in his hand.

ThirukKural English Meaning - Couplet -Translation:


An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top.

ThiruKural Transliteration:


kundRaeRi yaanaippoar kaNtatraal than-kaiththondru
uNtaakach cheyvaan vinai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore