திருக்குறள் - 1095     அதிகாரம்: 
| Adhikaram: kuripparidhal 2

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

குறள் 1095 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kurikkondu noakkaamai allaal orukan" Thirukkural 1095 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


குறித்துக் கொண்டு நோக்காமை யல்லது ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்றாள். அஃதாவது காமக்குறிப்புடையார்போல நகுதல். அது வெளிப்பட நில்லாமையின் போல என்றார். இது தன்குறிப்புத் தோன்றாமல் நகுதல் உடன்படுதலாமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - நேரே குறிக்கொண்டு நோக்காத் துணையல்ல; ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணைச் சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும். (சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம், சிறங்கணித்தல்: சுருங்குதல். அதுதானும் வெளிப்பட நிகழாமையின், 'போல'என்றான். 'நோக்கி' என்பது சொல்லெச்சம். இனிஇவளை எய்துதல் ஒருதலை என்பது குறிப்பெச்சம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - என்னை முகநோக்கி உற்றுப்பார்க்காத தன்மையே யன்றி ; ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்- ஒரு கண்ணைச் சுருக்கிப் பர்த்தாற்போல என்னை நோக்கிப் பின் தனக்குள்ளே மகிழ்வாள். சிறக்கணித்தாள் என்பது எது கைநோக்கி வலித்தது. சிறங்கணித்தல் வெளிப்படையாய் நிகழாமையாற் 'போல' என்றான். நோக்கி என்பது சொல்லெச்சம். இனி இவளை யடைதல் உறுதியென்பது குறிப்பெச்சம். இதுவரை கூறப்பட்டது தலைமகன் தலைமகள் குறிப்பினை யறிதல். இனிக் கூறப்படுவன தலைமகன் தோழி குறிப்பினை யறிதலும் தோழி அவ்விருவர் குறிப்பினையு மறிதலுமாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


காதல் குறிக்கொண்டு நோக்காமல் மாறாக ஒருகண் சிறக்கணித்தாள் (கண்ண்டித்தல்) போல மெல்ல சிரிக்கிறாள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


என்னையே குறிப்பாக கொண்டு பார்த்தல் அல்லாமலும், தான் ஒரு கண்ணை, ஒரு பக்கமாகச் சாய்த்தாள் போலவும் நோக்கி, தன்னுள்ளாகவே அவள் நகுவாள்!

Thirukkural in English - English Couplet:


She seemed to see me not; but yet the maid
Her love, by smiling side-long glance, betrayed.

ThirukKural English Meaning - Couplet -Translation:


She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.

ThiruKural Transliteration:


kuRikkoNdu noakkaamai allaal orukaN
siRakkaNiththaal poala nagum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore