திருக்குறள் - 705     அதிகாரம்: 
| Adhikaram: kuripparidhal

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.

குறள் 705 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kurippir kurippunaraa vaayin uruppinul" Thirukkural 705 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை, உறுப்பினுள் அவர் வேண்டுவது யாதொன்றாயினும் கொடுத்து, துணையாகக் கூட்டிக் கொள்க. உறுப்பினுள் என்பதற்குத் தனக்கு அங்கமாயினவற்றுள் எனவும் அமையும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் - குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ - ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வன? (முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பு அறிதற்கண் துணையாதல் சிறப்புப்பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது: அக்கண்களால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


குறிப்பின் குறிப்பு உணராவாயின்-பிறர் முகத்திலும் முகவுறுப்புகளிலுமுள்ள குறிப்புகளைக் கண்டும் அவற்றால் அவர் உள்ளக் குறிப்புக்களைக் காணமாட்டாதனவாயின்;உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ-ஒவ்வொரு புலனுக்கும் ஒவ்வொன்றாகவுள்ள ஐம்புல வுறுப்புகளுள், காட்சியையே தம் புலனாகக் கொண்ட கண்கள் வேறென்ன பயன்படுவனவாம்? 'குறிப்பு' இரண்டனுள், முன்னது தோற்றமாகிய புறக்குறிப்பு; பின்னது கருத்தாகிய அகக்குறிப்பு. இரண்டும் தொழிலாகு பெயர். குறிப்பறிதற்கு இன்றியமையாத கருவியாதல்பற்றி, அறிவான் உணர்வு அவன் கண்ணாகிய உறுப்பின்மேல் ஏற்பட்டது. என்ன பயத்தவோ என்னும் வினா, ஒரு பயனுமில்லை யென்னும் விடையை வேண்டி நின்றது. இவ்விரு குறளாலும் குறிப்பறியமாட்டாரது இழிவு கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


குறிப்புகளை கேட்டும் அதன் உள்நோக்கத்தை உணரவில்லை என்றால் கண்கள் இருந்தும் பயன் இல்லை.

Thirukkural in English - English Couplet:


By sign who knows not sings to comprehend, what gain,
'Mid all his members, from his eyes does he obtain?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another ?.

ThiruKural Transliteration:


kuRippiR kuRippuNaraa vaayin uRuppinuL
enna payaththavoa kaN.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore