திருக்குறள் - 838     அதிகாரம்: 
| Adhikaram: pedhaimai

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.

குறள் 838 - திருவள்ளுவர் - ThiruValluvar

"maiyal oruvan kaliththatraal paedhaidhan" Thirukkural 838 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


முன்னே பித்தாய் மயங்கிய ஒருவன் பின்பு கள்ளினை நுகர்ந்து களித்தாற் போலாவதொன்று, பேதை தன்கையின்கண் ஒன்றுடையனானவிடத்து.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் - பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று - அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும். ('பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதை தன்கை ஒன்று உடைமை பெறின் - பேதையானவன் தன் கையில் ஒரு சிறந்தபொருளை உடைமையாகப் பெற்றிருந்தால்; மையல் ஒருவன் களித்த அற்று-அது ஏற்கெனவே பித்துக் கொள்ளியான ஒருவன் அதன் மேலுங் கள்ளுண்டு மயங்கினாற்போலும். 'பெறின்' எனவே,அது சொந்த தேட்டன்றித் தெய்வத்தினால் வந்தமை பெறப்பட்டது. பேதைமையும் செல்வமயக்கும் ஒருங்கேயுடையவன் பித்தமும் கள்வெறியும் ஒருங்கே கொண்டவன்போல்,தலைகால் தெரியாமல் தடுமாறிக் கெடுவன் என்பதாம். இக்குறளால் பேதை பெற்ற செல்வம் அவன் பேதைமையையே மிகுக்கு மென்பது கூறப்பட்டது. 'ஆல்' அசைநிலை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பித்து பிடித்த ஒருவன் கள் உண்டதைப் போல், பேதை தனக்கு உடமையாக ஒன்றை பெற்றால் மாறிடுவான்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால், மயங்கிய ஒருவன் மேன்மேலும் கள்ளைப் பருகியது போல நிலைமாறி வழிதவறி நடப்பான்.

Thirukkural in English - English Couplet:


When folly's hand grasps wealth's increase, 'twill be
As when a mad man raves in drunken glee.

ThirukKural English Meaning - Couplet -Translation:


A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.

ThiruKural Transliteration:


maiyal oruvan kaLiththatraal paedhaidhan
kaiyondru udaimai peRin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore