திருக்குறள் - 280     அதிகாரம்: 
| Adhikaram: kootaavozhukkam

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

குறள் 280 - திருவள்ளுவர் - ThiruValluvar

"mazhiththalum neettalum vaendaa ulagam" Thirukkural 280 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின். இது வேடத்தாற் பயனில்லை: நல்லொழுக்கமே வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மழித்தலும் நீட்டலும் வேண்டா - தவம் செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா. உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின். (பறித்தலும் மழித்தலுள் அடங்கும், மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினார். இதனால் கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என அவரது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்காகாதென்று தள்ளிய ஒழுக்கத்தை விட்டுவிடின்; மழித்தலும் நீட்டலும் வேண்டா - தலைமயிரை வறண்டலும் சடையாக்கலும் வேண்டியதில்லை. சமணர் கையாளும் பறித்தல் முறையும் மழித்தலுள் அடங்கும். மழித்தல் என்னும் வினையினால் தலைமயிர் என்னும் செயப்படுபொருள் உணரப்படும். "மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன் ஆகுல நீர பிற". என்றதற் கேற்ப , கூடா வொழுக்க மில்லார்க்கு எவ்வகைப் புறக்கோலமும் வேண்டியதில்லை யென்பது இக்குறளாற் கூறப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தவம் செய்பவர்களுக்குத் தலைமயிரை மழித்தலும் அல்லது சடையாக்கலும் ஆகிய வேடம் 'தவம் செய்வதற்கு என்று' தேவையில்லை. தவத்திற்கு ஆகாதது என்ற தீமையான ஒழுக்கத்தினை நீக்கி விட்டாலே போதுமானதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மொட்டை அடித்துக்கொள்வதும் தாடி வைத்துக்கொள்வதும் தேவை இல்லை உலகம் பழிக்கின்ற செயல்களை விட்டொழித்தால்.

Thirukkural in English - English Couplet:


What's the worth of shaven head or tresses long,
If you shun what all the world condemns as wrong?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.

ThiruKural Transliteration:


mazhiththalum neettalum vaeNdaa ulagam
pazhiththadhu ozhiththu vitin.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore