திருக்குறள் - 715     அதிகாரம்: 
| Adhikaram: avaiyaridhal

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.

குறள் 715 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nandrendra vatrullum nandrae mudhuvarul" Thirukkural 715 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நன்றென்று சொல்லப்பட்ட எல்லாவற்றுள்ளும் மிக நன்று, தம்மின் முதிர்ந்தார்முன் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம். முதுவர்- தவத்தாலும் குலத்தாலும் கல்வியாலும் பிற யாதாலும் முதிர்ந்தார். இஃது இருந்த அவையின்கண் முந்துற்றுச் சொல்லல் ஆகா தென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நன்று என்றவற்றுள்ளும் நன்றே - ஒருவற்கு இது நன்று என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாவற்றுள்ளும் நன்றே; முதுவருள் முந்து கிளவாச் செறிவு - தம்மின் மிக்கார் அவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம். (தம் குறைவும், அவர் மிகுதியும், முந்து கிளர்ந்தாற் படும் இழுக்கும், கிளவாக்கால் எய்தும் நன்மையும் அறிந்தே அடங்கினமையின், அவ்வடக்கத்தினை 'நன்று என்றவற்றுள்ளும் நன்று' என்றார். முன் கிளத்தலையே விலக்கினமையின், உடன் கிளத்தலும் பின் கிளத்தலும்ஆம் என்பது பெற்றாம். இதனான் மிக்கார் அவைக்கண்செய்யும் திறம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


முதுவருள் முந்து கிளவாச் செறிவு -அறிவால் தம்மினும் மிக்கோ ரவையின்கண் அவரினும் முற்பட்டு ஒன்றைச் சொல்லாதிருக்கும் அடக்கம்; நன்று என்றவற்றுள்ளும் நன்றே-அவையிற் பேசுவார்க்கு நல்லதென்று சொல்லப்பட்ட குணங்களெல்லாவற்றுள்ளும் நல்லதே. முதுவரின் அறிவுமிகையும் தம் அறிவுக் குறைவும், முந்துகிளத்தலால் நேரும் அடக்கமின்மையும் வழுப்படலுமாகிய இருமடிக் குற்றமும்; முந்து கிளவாமையாலுண்டாகும் அடக்கமும் வழுப்படாமையும் ஆகிய இருமடி நன்மையும். எண்ணியடங்கும் அடக்கம் அறிவோடு கூடியதாதலின், அதை ' நன்றென்றவற்றுள்ளும் நன்றே' என்றார். முன்கிளத்தலை விலக்கியமையாலும் , உடன் கிளத்தல் அவையோர்க்குப் பயன்படாமையுஞ் சேர்ந்து மும்மடிக் குற்றந் தங்குமாதலாலும், பின்கிளத்தலே, அதுவும் அவையோர்க்குப் பயன்படினே, நன்றாகும் என்பதாம். ஏகாரம் தேற்றம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நல்லது என்பனவற்றுள் நல்லது முத்த அறிஞர் முன் அவசரப்பட்டு பேசாது அடங்கி இருப்பது.

Thirukkural in English - English Couplet:


Midst all good things the best is modest grace,
That speaks not first before the elders' face.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.

ThiruKural Transliteration:


nandrendra vatruLLum nandrae mudhuvaruL
mundhu kiLavaach cheRivu.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore