திருக்குறள் - 826     அதிகாரம்: 
| Adhikaram: kootaanatpu

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.

குறள் 826 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nattaarpoal nallavai sollinum ottaarsol" Thirukkural 826 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


உற்றாரைப்போல நல்லவானவை சொன்னாராயினும் பகைவர் சொல்லுஞ்சொல் விரைந்தறியப்படும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நட்டார்போல் நல்லவை சொல்லினும் - நட்டார் போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார் சொல் 'ஒல்லை உணரப்படும்' - பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும். ('சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம். ஒட்டாராதலால் தீமை பயத்தல் ஒருதலை என்பார், 'ஒல்லை உணரப்படும்' என்றார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நட்டார்போல் நல்லவை சொல்லினும் - உண்மை நண்பர்போல் நன்மை பயக்கக் கூடியவற்றைச் சொன்னாரேனும்; ஒட்டார் சொல் ஒல்லை உணரப்படும் - பகைவர் சொற்கள் நன்மை பயவாமை விரைந்து அறியப்படும். எதிர்மறையும்மை ஒத்துக்கொள்வுப் பொருளது (Concession). கூடா நட்பினர் சொல்லளவில் நல்லவற்றையே சொல்வராதலின், எதிர்மறைப் பொருள் விளைவையே தழுவும். ஒல்லையுணரப்படுதலாவது நல்லவை தீயவையாக விரைந்து வெளிப்படல்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நன்மைச் செய்பவர்ப்போல் நல்லதை சொன்னாலும் மனதிற்கு இசையாதவர் சொல்லின் உண்மைத் தன்மை உடனே உணரப் படும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நம்மிடம் பேசும் போது நமக்கு நண்பரைப் போலவே நல்ல பேச்சுகளைச் சொன்னாலும், நம்மோடு ஒட்டாதவரின் வஞ்சகத்தை விரைவிலேயே அறிந்துவிடலாம்.

Thirukkural in English - English Couplet:


Though many goodly words they speak in friendly tone,
The words of foes will speedily be known.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).

ThiruKural Transliteration:


nattaarpoal nallavai sollinum ottaarsol
ollai uNarap padum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore