திருக்குறள் - 28     அதிகாரம்: 
| Adhikaram: neeththaar perumai

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

குறள் 28 - திருவள்ளுவர் - ThiruValluvar

"niraimozhi maandhar perumai" Thirukkural 28 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். ('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்! பயனான் உணர்த்துதல்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நிறைமொழி மாந்தர் பெருமை - பயன் நிறைந்த சொற்களையுடைய துறவியரின் பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தில் அவர் கட்டளையாகச் சொல்லப்பெறும் மந்திரங்களே கண்கூடாகக் காட்டிவிடும். இக்குறள், "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப". என்னும் தொல்காப்பிய நூற்பாவைத் ( 1484 ) தழுவியது. மறை மொழி அல்லது மந்திரம் என்பது, வாய்மொழியும் சாவிப்பும் என இருவகைப்படும். திருமூலரின் திருமந்திரமும், நம்மாழ்வாரின் திரு வாய்மொழியும் வாய்மொழிபோல்வன; கவுந்தியடிகள் காவிரித் தென்கரைச் சோலையொன்றில் வம்பப்பரத்தையும் வறுமொழியாளனுமான இருவரை நரிகளாக்கியது சாவிப்பு. மறை ( வேத ) த் தன்மையுடைய மொழி மறைமொழி ; மனத்திண்மையாற் கருதியது நிறை வேறும் மொழி மந்திரம் . மன் + திரம் = மந்திரம். முன்னுதல் = கருதுதல். முன் - மன். திரம் = திறம். ஒ.நோ : மன்று - மந்து - மந்தை. முரி - முறி ( வளை ). ஆரியர் வருகைக்கு முற்பட்டதும், எண்வகை வனப்பான பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் எழுநிலத்திற்கும் இலக்கியமாயிருந்ததுமான முதலிரு கழகத் தூய தமிழிலக்கியம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதென அறிக.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


பயன் நிறைந்த மறைமொழி எனப்படும் சொற்களைச் செல்லும் முனிவருடைய பெருமையினை அவர்கள் ஆணையாகக் சொல்லும் அச்சொற்களே (மறைமொழி) காட்டிவிடும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நிறைவான மொழி மனிதர்களின் பெருமையை, மண்ணில் மறைவான மொழி காட்டிவிடும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நிறைவான மொழிகளையே சொல்லும் சான்றோரின் பெருமையை, உலகத்தில் நிலையாக விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

Thirukkural in English - English Couplet:


The might of men whose word is never vain,
The 'secret word' shall to the earth proclaim.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world.

ThiruKural Transliteration:


NiRaimozhi maandhar perumai nilaththu
maRaimozhi kaatti vidum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore