திருக்குறள் - 10     அதிகாரம்: 
| Adhikaram: katavul vaazhththu

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா
ரிறைவனடி சேரா தவர்.

குறள் 10 - திருவள்ளுவர் - ThiruValluvar

"piravip perungatal neendhuvar neendhaar" Thirukkural 10 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை - Thirukkural Meaning in Tamil


இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.

மணக்குடவர் உரை - Thirukkural Meaning in Tamil


பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்

பரிமேலழகர் உரை - Thirukkural Meaning in Tamil


இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.

ஞா. தேவநேயப் பாவாணர் - Thirukkural Meaning in Tamil


இறைவன் அடி (சேர்ந்தார்) - இறைவன் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவர்; பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - பிறவியாகிய பெரியகடலைக் கடப்பர்; சேராதார் நீந்தார் - அப்புணையைச் சேராதவர் அக்கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர். வீடுபேறுவரை கணக்கில் கழிநெடுங்காலம் விடாது தொடர்ந்து வருவதாகக் கருதப்படுதலின், பிறவியைப் பெருங்கடல் என்றார். பிறவி வாழ்வு எல்லையில்லாது தொடர்ந்துவரும் துன்பம் மிகுந்த நிலையற்ற சிற்றின்பமேயாதலால், அதனின்று விடுதலைபெற்று நிலையான தூய பேரின்பந்துய்க்கும் பிறவாவாழ்வைப் பெறும்வழியை இக்குறள் கூறுகின்றது. சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். பிறவியைப் பெருங்கடலாக உருவகித்து இறைவனடியைப் புணையாக உருவகியாதுவிட்டது ஒருமருங்குருவகம். புணை யெனினும் கலம் எனினும் ஒக்கும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


இறைவன் அடிகள் என்னும் தொப்பத்தைச் சேர்ந்தவர்கள், பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு சேராதவர்கள் (நினைத்திருக்காதவர்கள்) நீந்த மாட்டார்கள்; அதனுள் அழுந்துவார்கள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இறைவன் அடி சார்ந்தால் பிறவி கடலை நீந்தலாம்.இல்லையேல் நீந்தமுடியது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது.

Thirukkural in English - English Couplet:


They swim the sea of births, the 'Monarch's' foot who gain;
None others reach the shore of being's mighty main

ThirukKural English Meaning - Couplet -Translation:


None can swim the great sea of births but those who are united to the feet of God

ThiruKural Transliteration:


PiRavip Perungatal neendhuvar neendhaar
iRaivan adiseraa Thaar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore