திருக்குறள் - 675     அதிகாரம்: 
| Adhikaram: vinaiseyalvakai

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

குறள் 675 - திருவள்ளுவர் - ThiruValluvar

"porulkaruvi kaalam vinaiyitanoadu aindhum" Thirukkural 675 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருளும், கருவியும், காலமும், வினையும் வினைசெய்யும் இடமுமென்னும் ஐந்தினையும் மயக்கந்தீர எண்ணிப் பின்பு வினைசெயத் தொடங்குக. இவற்றுள் ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு வகைப்படும்:-1. பொருளாவது கெடும் பொருளும் பெறும் பொருளும், 2. கருவியாவது தனக்கு உள்ள படையும் மாற்றரசர்க்கு உள்ள படையும், 3. காலமாவது தனக்காங்காலமும் மாற்றரசர்க் காங்காலமும், 4. வினையாவது தான் செய்யும் வினையும் பகைவர் செய்யும் வினையும், 5. இடமாவது தனக்கா மிடமும் பகைவர்க்கா மிடமும் ஆம். இவை செய்யும் வினைக்கு முற்பட வேண்டுதலின் முற் கூறப்பட்டன.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் - வினைசெய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும்; இருள் தீர எண்ணிச் செயல் - மயக்கம் அற எண்ணிச் செய்க. (எண்ணொடு, பிறவழியும் கூட்டப்பட்டது. பொருள் - அழியும் பொருளும் ஆகும்¢ பொருளும். கருவி-தன்தானையும் மாற்றார் தானையும். காலம் - தனக்கு ஆகுங் காலமும் அவர்க்கு ஆகுங் காலமும். வினை - தான் வல்ல வினையும் அவர் வல்ல வினையும். இடம் - தான் வெல்லும் இடமும் அவர் வெல்லும் இடமும். இவற்றைத் தான் வெற்றியெய்தும் திறத்தில் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்-போர் செய்யுமுன் பொருள், கருவி, காலம், செயல், இடம் என்னும் ஐவகையிலும்; இருள் தீர எண்ணிச் செயல்-தனக்கும் தன் பகைவர்க்கு முள்ள நிலைமைகளை மயக்கமற எண்ணி, தன்வலி மிக்கிருப்பின் அதன்பின் போர் செய்க. தன் நிலைமையைப் பகைவர் நிலைமையொடு ஒப்பு நோக்கியே வினை துணியவேண்டியிருத்தலின், கருவி முதலிய ஐந்தும் இருசார்க்கும் பொதுவாம். 'பொருள்' தன்பொருளும் பகைவர் பொருளும் தனக்கு அழியும்பொருளும் ஆகும்பொருளுமாம். 'கருவி' தன் படையும் அதன் கருவியும் பகைவர் படையும் அதன் கருவியுமாம். 'காலம்' தனக் கேற்ற காலமும் தன் பகைவர்க்கு ஏற்காத காலமுமாம். 'வினை' தன்படைப் போர்த்திறமும் பகைவர் படைப் போர்த்திறமுமாம். 'இடம்' தான் வெல்லு மிடமும் தன் பகைவர் தோற்கும் இடமுமாம். "என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி ஒன்று வழி யுடைய எண்ணினுட் பிரிந்தே" (இடை-49) என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி, 'ஒடு' எண்ணுப் பொருளில் வந்து ஏனையிடத்தொடும் இயைந்ததாகக் கொள்ளப் பெறும். இக்காலவழக்கில் அஃதின்றியும் பொருள் நிரம்பும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தொழில் செய்யும் போது பொருளும், கருவியும், காலமும், தொழிலும், இடமும் ஆகிய இந்த ஐந்தினையும் மயக்கம் நீங்க எண்ணிச் செய்தல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு காரியத்தில் ஈ.டுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எதை, எத்தகைய கருவியுடன், எப்பொழுது, எவ்விடத்தில், செய்யவேண்டும் என்ற ஐந்தையும் ஐயமற சிந்தித்து செயல்பட வேண்டும்.

Thirukkural in English - English Couplet:


Treasure and instrument and time and deed and place of act:
These five, till every doubt remove, think o'er with care exact.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.

ThiruKural Transliteration:


poruLkaruvi kaalam vinaiyitanoadu aindhum
iruLdheera eNNich seyal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore