திருக்குறள் - 81     அதிகாரம்: 
| Adhikaram: virundhompal

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

குறள் 81 - திருவள்ளுவர் - ThiruValluvar

"rundhoampi ilvaazhva thellaam" Thirukkural 81 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது, இரு வகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கு ஈதல் அன்மையானும், இடைநின்ற விருந்து ஓம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முதல் ஆயிற்று. வேறாகாத அன்புடை இருவர் கூடியல்லது செய்யப்படாமையின், இஃது அன்புடைமையின்பின் வைக்கப்பட்டது.) இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - கணவனும் மனைவிபும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு - விருந்தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே. இக் காலத்திற்போல் உண்டிச் சாலைகளும் தங்கல் விடுதிகளுமில்லாத பண்டைக் காலத்தில், பணம் பெற்றேனும், இல்லறத்தாரையன்றி விருந்தினரைப் பேண ஒருவரு மின்மையின், இல் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் விருந்தோம்பலே என்றார். ' விருந்து ' பண்பாகு பெயர்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


இவ்வாழ்கையில் வாழ்ந்து பொருளினைக் காத்து வாழ்வதெல்லாம் விருந்தினரைப் போற்று உதவி செய்தற் பொருட்டேயாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இருக்கசெய்து இல்வாழ்வது, விருந்து கொடுப்பது போன்றவைகள் விவசாயம் செய்பவர்களின் பொருட்டே வந்தது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவுதலின் பொருட்டே ஆகும்.

Thirukkural in English - English Couplet:


All household cares and course of daily life have this in view
Guests to receive with courtesy, and kindly acts to do.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.

ThiruKural Transliteration:


rundhoampi ilvaazhva thellaam virundhoampi
vaeLaaNmai seydhaR poruttu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore