திருக்குறள் - 389     அதிகாரம்: 
| Adhikaram: iraimaatchi

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

குறள் 389 - திருவள்ளுவர் - ThiruValluvar

"sevikaippach sorporukkum panpudai vaendhan" Thirukkural 389 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக் கீழே உலகு தங்கும். சொற்பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சொல் செவி கைப்பப் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் - இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவுநோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது, கவிகைக்கீழ்த் தங்கும் உலகு - குடைநிழற் கண்ணே தங்கும் உலகம். ('செவி கைப்ப' என்றதற்கு ஏற்ப, இடிக்குந் துணையாயினார் என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக் 'கைப்ப' என்றார். பண்பு உடைமை : விசேட உணர்வினராதல். அறநீதிகளில் தவறாமையின், மண் முழுதும் தானே ஆளும் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


செவிகைப்பச் சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் - அரசன் தீய வழியிற் செல்லும் போது அஞ்சாது இடித்துரைக்கும் நல்லமைச்சர், செவிக்கு இன்னாதனவாகச் சொல்லும் சொற்கள் பொறுக்கத் தகாதனவாயினும் அவற்றின் இனிய விளைவு நோக்கிப் பொறுத்துக்கொள்ளும் பண்புடைய அரசனது; கவிகைக் கீழ் உலகு தங்கும்-குடைநிழலில் உலகந்தங்கும். 'செவிகைப்ப' என்பதற்கேற்ப இடித்துரைக்கும் நல்லமைச்சர் என்பது வருவித்துரைக்கப்பட்டது. கைத்தல் கசத்தல். இனித்தல் இனிமையைக் குறித்தலாற் கசத்தல் இன்னாமையைக் குறித்தது. நாவின் புலம் செவியின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது இனம் பற்றி. 'கவிகை' 'உலகு' இரண்டும் ஆகுபெயர். தங்குதல் இனிதாய். வாழ்ந்திருத்தல். சிறந்த அறிவுரைகளைக் கைக்கொள்வதால் உலகம் முழுதும் ஆள்வான் என்பதாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


துணையாக இருப்போர் செவிபொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைச் சொன்னாலும் அவற்றின் நன்மை கருதிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


காதுகளும் கூசும் வார்த்தைகளை பொறுத்துக் கொள்ளும் பண்புடைய மன்னனின் ஆளுமையின் கிழ் தங்கும் உலகு.

Thirukkural in English - English Couplet:


The king of worth, who can words bitter to his ear endure,
Beneath the shadow of his power the world abides secure.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.

ThiruKural Transliteration:


sevikaippach soRpoRukkum paNpudai vaendhan
kavikaikkeezhth thangum ulagu.

திருத்தமிழ்
© 2025 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore