திருக்குறள் - 664     அதிகாரம்: 
| Adhikaram: vinaiththitpam

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

குறள் 664 - திருவள்ளுவர் - ThiruValluvar

"solludhal yaarkkum eliya ariyavaam" Thirukkural 664 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம். அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சொல்லுதல் யார்க்கும் எளிய - யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம். (சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின். 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


சொல்லுதல் யார்க்கும் எளிய-ஒரு வினையை இன்ன கருவியால் இன்னவாறு செய்து முடிக்கலாம் என்று வழி சொல்வது எவருக்கும் எளிதாம்; சொல்லிய வண்ணம் செயல் அரிய ஆம்-ஆனால், சொன்னவாறு அதைச் செய்து முடிப்பது பெரும்பாலார்க்கு அரிதாம். சொல்லுதலும் செய்தலும் சொல்வார் செய்வார் பன்மைபற்றிப் பன்மையாகிப் பன்மைவினை கொண்டன. ஏற்புழிக்கோடல் என்னும் உத்தியால், அரிது என்பது ஒரு சிலர் அரும்பாடு பட்டுச் செய்துமுடித்தலையும், பெரும்பாலார் எப்பாடு பட்டும் செய்ய முடியாமையையும் உணர்த்தும் என்று கொள்ளப் பெறும். இனி, எதிர் நிலை (அருத்தாபத்தி) யளவையால், ஒரோ ஒருவர்க்கு அது எளிதாக முடியும் என்பதும் அறியப்படும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


யான் இத்தொழிலினை இவ்விதத்தில் செய்து முடிப்பேன் என்று சொல்லுதல் யார்க்கும் எளிதானதாகும். அதனை அவ்வாறே செய்தல் யார்க்கும் அரியதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


செயல்விளக்கம் பேசுதல் எல்லாருக்கும் எளிமையானது. அரியது விளக்கியபடி செயல்படுதல்.

Thirukkural in English - English Couplet:


Easy to every man the speech that shows the way;
Hard thing to shape one's life by words they say!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.

ThiruKural Transliteration:


solludhal yaarkkum eLiya ariyavaam
solliya vaNNam seyal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore