திருக்குறள் - 12     அதிகாரம்: 
| Adhikaram: vaansirappu

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.

குறள் 12 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thuppaarkkuth thuppaaya thuppaakkith" Thirukkural 12 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கித் தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை - அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின் அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி - உண்பார்க்கு நல்ல வுணவுகளை உண்டாக்கி; துப்பார்க்கு - அவற்றை உண்பவர்க்கு; துப்பாயதும் மழை - தானும் உணவாவது மழையே. இருதிணை யறுவகை யுயிர்கட்கும் உணவு இன்றியமையாததேனும், தலைமைபற்றித் துப்பார் என உயர்திணைமேல் வைத்துக் கூறினார். முந்தின குறளில் அமிழ்தம் என ஒன்றாகக் கூறியதை, இக்குறளில் நீரும் உணவும் என இருவகையாக வகுத்தார். உணவென்றது உண்பனவும் தின்பனவும் பருகுவனவும் நக்குவனவுமான நால்வகை விளைபொருட்களை, சோறுங் களியுமாகச் சமைக்கப் பெறும் நெல் புல் (கம்பு) முதலியன உண்பன; காய்கறிகள் தின்பன; பாலும் பதனீரும் (தெளிவும்) பருகுவன; தேனும் நெகிழ்நிலைப் பயினும் நக்குவன. மழை உணவுப்பொருளை விளைப்பதொடு தானும் நீராக உண்ணப்படுவது என்று அதன் சிறப்புக் கூறப்பட்டது. துத்தற்சொல் நான்முறை வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி. "துப்பாய துப்பாக்கி" என்பது சொற்பின் வருநிலையணி. துப்பாய தூஉம் என்பது இசைநிறை யளபெடை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


உண்பவர்களுக்கு நல்ல உணவுகளை உண்டாக்கிக் கொடுப்பது, தானும் உண்பவர்களுக்கு உணவாக இருப்பதும் மழையேயாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


துப்பாதவருக்கு துப்பும் பொருளையும் உருவாக்கி துப்போவது போல் துவுவதே மழை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


உண்பவர்க்குத் தகுந்த பொருள்களை விளை வித்துத் தந்து அவற்றைப் பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக (பருகும் நீராக) விளங்குவதும் மழையே ஆகும்.

Thirukkural in English - English Couplet:


The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Rain produces good food, and is itself food.

ThiruKural Transliteration:


Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth
Thuppaaya Thoou Mazhai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore