திருக்குறள் - 1261     அதிகாரம்: 
| Adhikaram: avarvayinvidhumpal

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

குறள் 1261 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vaalatrup purkendra kannum avarsendra" Thirukkural 1261 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்களும் அவர் வரவைப்பார்த்து நோதலால் ஒளியிழந்து புல்லென்றன: விரல்களும் அவர்போன நாள்களை யெண்ணி முடக்குதலாய்த் தேய்ந்தன. இது வரவு காணாமையால் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது , சேயிடைப் பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகவினான் ஒருவரை யொருவர் காண்டற்கு விரைதல் . தலைமகற் பிரிவும் தலைமகள் ஆற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின் இருவரையும் சுட்டிப் பொதுவாகிய பன்மைப் பாலாற் கூறினார். (தலைமகள் காண்டல் விதுப்பினால் சொல்லியது.) அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த - அவர் நம்மைப் பிரிந்து போன நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள் தேய்ந்தன; கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற - அதுவேயன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஒளியிழந்து புல்லியவாயின: இவ்வாறாயும் அவர் வரவு உண்டாயிற்றில்லை. (நாள் - ஆகுபெயர். புல்லியவாதல் - நுண்ணிய காணமாட்டாமை. 'ஒற்ற' என்பது 'ஒற்றி' எனத் திரிந்து நின்றது. இனி யான் காணுமாறு என்னை? என்பதாம். நாள் எண்ணலும் வழி பார்த்தலும் ஒருகாற் செய்தொழியாது இடையின்றிச் செய்தலான், விதுப்பாயிற்று.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகள் காண்டல் விதுப்பினாற் சொல்லியது.) அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த- அவர் எம்மைவிட்டுப் பிரிந்துபோன நாட்களைச் சுவரிற்குறித்த குறிகளைத் தொட்டுத் தொட்டு எண்ணுதலால், என் விரல்கள் தேய்ந்து போயின. கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற- அதுவுமன்றி என் கண்களும் அவர்வரும் வழியைப் பார்த்துப்பார்த்து ஒளியிழந்து பூத்துப்போயின. இவ்வாறாயும் இன்னும் அவர் வரக்காணேன். இனி அவரைக் காணுமாறுண்டோ வென்பதாம். 'வாள்' உரிச்சொல். புற்கென்னுதல் பொலிவற்று நுண்பொருள்களைக் காணமுடியாமை. 'நாள்' ஆகு பொருளி. நாளெண்ணுதலும் வழி பார்த்தலும் இடைவிடாது நிகழ்தலின் விதும்பலாயிற்று.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வழி பாரத்து செயல் இழந்த கண்ணும் அவர் சென்ற நாட்களை எண்ணியதால் தேய்ந்த விரலும் என வேதனையானது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அவர் வருவாரென வழியையே பார்த்துக் கண்களில் ஒளியும் கெட்டன; அவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின.

Thirukkural in English - English Couplet:


By My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn,
With nothing on the wall the days since I was left forlorn.

ThirukKural English Meaning - Couplet -Translation:


My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.

ThiruKural Transliteration:


vaalatrup purkendra kannum avarsendra
naalotrith thaeyndha viral.

திருத்தமிழ்
© 2025 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore