திருக்குறள் - 272     அதிகாரம்: 
| Adhikaram: kootaavozhukkam

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.

குறள் 272 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vaanuyar thoatram evanseyyum thannenjam" Thirukkural 272 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வானளவும் உயர்ந்த பெருமையுண்டாயினும் அஃதியாதினைச் செய்யவற்று; தன்னெஞ்சறியக் குற்ற முண்டாயின். தான்- அசை. இஃது இக்கூடா ஒழுக்கத்தானைப் பிறரறிந்து இகழாராயினும் அவன் செய்கின்ற தவத்தினாற் பயனுண்டாகாது என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வான் உயர் தோற்றம் எவன் செய்யும் - ஒருவனுக்கு வான் போல உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்; தான் அறி குற்றம் தன் நெஞ்சம் படின் - தான் குற்றம் என்று அறிந்த அதன் கண்ணே தன் நெஞ்சு தாழும் ஆயின். ( 'வான் உயர் தோற்றம்' என்பது 'வான் தோய்குடி' (நாலடி 142) என்றாற்போல இலக்கணை வழக்கு. அறியாது செய்த குற்றமல்லது அறிந்து வைத்துச் செய்த குற்றம் கழுவப்படாமையின், நெஞ்சு குற்றத்ததாயேவிடும்; விடவே நின்ற வேடமாத்திரத்துக்குப் புறத்தாரை வெருட்டுதலே அல்லது வேறு பயன் இல்லை என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் நெஞ்சம் அறிகுற்றம் தான் படின்-தன் நெஞ்சமே குற்றமென்றறிந்ததை ஒருவன் செய்வானாயின்; வான் உயர் தோற்றம் எவன் செய்யும்-அவனது வானளாவ வுயர்ந்த தவக் கோலம் பிறரை அச்சுறுத்துவதன்றி வேறு என்ன பயன்படுவதாம்? வானுயர்வு என்றது காட்சிப் பொருளைக் கருத்துப்பொருளாக மாற்றிய பொருள்வகை மாற்று. தனக்கு நன்மையே செய்யும் தன் சொந்த வுறுப்பு என்பது படத் 'தன்னெஞ்சம்' என்றும், நெஞ்சம் குற்ற மென்றறிந்ததை நெஞ்சமே காணச் செய்வதால் 'தானறி குற்றம்' என்றும், நெஞ்சறக் குற்றஞ் செய்யும் துணிவுக்கடுமையும் அதற்குக் கழுவாயின்மையும் நோக்கிக் குற்றப்படின் என்றுங் கூறினார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தான் குற்றம் என்று அறிந்த அதனைச் செய்யத் தனது நெஞ்சம் போய்த் தாழ்ந்து விடுமானால், வானம் அளவு உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்?.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பெரிய உருவம் பெற்று என்ன பயன் தனது நெஞ்சம் தன்னை குற்றம் கொண்டவனாக அறிந்தால்.

Thirukkural in English - English Couplet:


What gain, though virtue's semblance high as heaven his fame exalt,
If heart dies down through sense of self-detected fault?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.

ThiruKural Transliteration:


vaanuyar thoatram evanseyyum thannenjam
thaanaRi kutrap patin.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore