திருக்குறள் - 82     அதிகாரம்: 
| Adhikaram: virundhompal

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

குறள் 82 - திருவள்ளுவர் - ThiruValluvar

"virundhu puraththadhaath thaanundal saavaa" Thirukkural 82 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சாவா மருந்து எனினும் - உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும் ; விருந்து புறத்ததாத் தானுண்டல் - தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று - விரும்புதல் முறைமையுடைத்து அன்று.(சாவா மருந்து : சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


சாவா மருந்து எனினும் - உண்ணப் படும் உணவு சாவை நீக்கும் மருந்தே யெனினும்; விருந்து புறத்ததாத் தான் உண்டல் வேண்டற் பாற்று அன்று - விருந்தினரை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டுத் தான் மட்டும் உள்ளிருந்து தனித்துண்டல் விரும்பத்தக்க தன்று. இனி, விருந்தினரை வெளியே வைத்துவிட்டுத் தனித்துண்டல் சாவா மருந்தாகும் என்று சிலர் சொன்னாராயினும், அது செய்யத் தக்கதன்று என வேறோர் உரையுமுளது. அது, "நல்லா றெனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று". என்றாற் போல்வது. சாவா மருந்து சாவாமைக்குக் கரணியமாகிய மருந்து. நோவா மருந்து, மூவா மருந்து, சாவா மருந்து என்னும் மூவகை மருந்துகளுள் சாவா மருந்து தலை சிறந்ததாதலின், உம்மை முற்றும்மை. அதிகமான் ஒளவையார்க்கு அளித்த அருநெல்லிக்கனி பரிசில் போன்றதாதலின், ஈண்டைக்கு எடுத்துக் காட்டாகாது. இனி, விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாம் (சாவையொக்கும்). அங்ஙனம் உண்பது சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று என்றும் பிரித்துப் பொருள் கொள்வர்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


வந்த விருந்தினரை இல்லத்தின் புறத்தே இருக்கவைத்துச் சாவியினைத் தராத மருந்தாக இருந்தாலும், தான் மட்டும் சாப்பிடுதல் முறைமையுடையதாகாது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


விருந்தாளி வெளியே இருக்க சாகா மருந்தாக இருப்பினும் தான் மட்டும் உண்ணுவது இல்லை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


விருந்தாக வந்தவர் வெளியே சென்றிருக்க, தான் மட்டும் உண்ணுதல், சாவா மருந்தாகிய அமிழ்தமே என்றாலும் விரும்பத் தக்கது அன்று.

Thirukkural in English - English Couplet:


Though food of immortality should crown the board,
Feasting alone, the guests without unfed, is thing abhorred.

ThirukKural English Meaning - Couplet -Translation:


It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.

ThiruKural Transliteration:


virundhu puRaththadhaath thaanuNdal saavaa
marundheninum VaeNtaRpaaR Randru.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore