திருக்குறள் - 537     அதிகாரம்: 
| Adhikaram: pochchaavaamai

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.

குறள் 537 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ariya endru aakaadha illaipoch saavaak" Thirukkural 537 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


செயற்கு அரியனவென்று செய்யலாகாதன வில்லை; மறவாமையாகிய கருவியாலே பாதுகாத்துச் செய்வானாயின். இது வினை செய்யுங்கால் மறவாமை வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அரிய என்று ஆகாத இல்லை - இவை செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை, பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப் பெறின். (பொச்சாவாத என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. அந்தக்கரணமாகலின் 'கருவி' என்றார். இடைவிடாத நினைவும் தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தினால் எண்ணிச் செய்தால் ; அரிய என்று ஆகாத இல்லை - செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவருக்கு முடியாத கருமங்கள் இல்லை. இது பரிமேலழகர் கல்வியாரவார உரையைத்தழுவியது . மனத்திற்கு அகக்கரணம் என்று பெயரிருத்தலால் , 'கருவி' என்பதற்கு அவர் மனம் என்று பொருள் கொண்டார் , கரணம் கருவி. இப்பொருட்குப் 'பொச்சாவா' ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 'பொச்சாவாக்' கருவி என்னுந் தொடரைப் பொச்சாவாமையாகிய கருவி என்று இருபெயரொட்டாகக் கொள்வதே இயற்கையான முறையாம் . இப்பொருட்குப் 'பொச்சாவா' ஈறுகெட்ட எதிர்மறைத் தொழிற்பெயர் போல்வதாம் . இடைவிடா முயற்சியும் சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மறதி இல்லாத மனத்தாலே எண்ணிச் செய்யப்பட்டால் 'இவை செய்வதற்கு அருமையானவை' என்று சொல்லப்படும் முடியாத செயல்கள் எதுவுமே இல்லை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


முடியாத செயல் என்று எதுவும் இல்லை மறதியற்ற நிலை என்ற கருவியை போற்றி செயல்பட்டால்.

Thirukkural in English - English Couplet:


Though things are arduous deemed, there's nought may not be won,
When work with mind's unslumbering energy and thought is done.

ThirukKural English Meaning - Couplet -Translation:


There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.

ThiruKural Transliteration:


ariya-endru aakaadha illaipoch saavaak
karuviyaal poatrich seyin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore