திருக்குறள் - 100     அதிகாரம்: 
| Adhikaram: iniyavaikooral

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

குறள் 100 - திருவள்ளுவர் - ThiruValluvar

"iniya ulavaaka innaadha kooral" Thirukkural 100 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இனிய உளவாக இன்னாதகூறல் - அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். ('கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இனிய உளவாக இன்னாத கூறல்--தனக்கு அறமும் பிறர்க்கு இன்பமும் பயக்கும் இனிய சொற்களும் எளிதாய் வழங்குமாறு தன்னிடத்திருக்கவும்,அவற்றை வழங்காது தனக்குத் தீதும் (பாவமும்) பிறர்க்குத் துன்பமும் பயக்கும் கடுஞ் சொற்களை ஒருவன் வழங்குதல் ; கனி இருப்பக் காய் கவர்ந்த அற்று - இனியனவும் வாழ்நாளை நீட்டிப்பனவுமான கனிகளும் கைப்பனவும் சாவைத் தருவனவுமான காய்களும் ஒரு சரியாய்க் கைக்கு எட்டுவனவாக விருக்கவும் , அவற்றுள் முன்னவற்றை விட்டுவிட்டுப் பின்னவற்றை மட்டும் பறித்துண்ட லொக்கும் . பொருளைச் சிறப்பிக்கும் அடைமொழிகள் உவமத்திற்கும் ஏற்கு மாதலால், இனிய கனி என்பது ஒளவையாருண்ட அருநெல்லிக் கனி போலும் வாழ்வு நீட்டியையும்,இன்னாத காய் என்பது எட்டிக்காய் போலும் உடன்கொல்லியையும், குறிக்கும் என அறிக. ' கவர்ந்தற்று ' என்னும் சொல் மரங்களினின்று காய்கனிகளைப் பறிக்குஞ் செயலை நினைவுறுத்தும். கவர்தல் பறித்தல்; இங்குப் பறித்துண்டல். பிறரிடத்து இன்னாச் சொற் சொல்லுதல் தனக்கே தீங்கை வருவிக்கும் பேதைமை யென்பது இதனாற் கூறப்பட்டது. உவமமும் பொருளும் சேர்ந்தது உவமை என அறிக.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அறம்பயக்கும் இனிமையான சொற்களும் தன்னிடத்தே இருக்க, அவற்றைக் கூறாமல் கடுஞ்சொற்களைச் சொல்லுதல், கனிகள் தன்னிடம் இருக்கும்போது காய்களைத் தின்பது போன்றதனை ஓக்கும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இனிமையானது இருக்கும் பொழுது இனிமையின்றி கூறுவது கனி இருக்க காய் பறிப்பது போன்றது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும், காயைத் தின்பது போன்றதே!

Thirukkural in English - English Couplet:


When pleasant words are easy, bitter words to use,
Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.

ThirukKural English Meaning - Couplet -Translation:


To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.

ThiruKural Transliteration:


iniya uLavaaka innaadha kooRal
kani-iruppak kaaikavarnh thatru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore