திருக்குறள் - 779     அதிகாரம்: 
| Adhikaram: pataichcherukku

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

குறள் 779 - திருவள்ளுவர் - ThiruValluvar

"izhaiththadhu ikavaamaich chaavaarai yaarae" Thirukkural 779 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


முற்கூறிய வஞ்சினம் தப்பாமல் சாவாரை அவர் தப்பியது சொல்லிப் பழிக்கவல்லவர் யாவர். இது வஞ்சினம் தப்பின் படவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இழைத்தது இகவாமைச் சாவாரை - தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை; பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார் - அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்குரியார் யாவர்? (இழைத்தல்: இன்னது செய்யேனாயின் இன்னனாகுக எனத் தான் வகுத்தல். 'சொல்லி' என்பது அவாய் நிலையான்வந்தது. வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற்சிறப்புக் கூறியவாறு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இழைத்தது இகவாமைச் சாவாரை- தாம் கூறின வஞ்சினம் தப்பாதவாறு, தம் குறிக்கோள் நிறைவேறாதவழிச் சாகவல்ல மறவரை; பிழைத்தது ஒறுக்கிற்பவர் யாரே-அவர் தோல்வியைச் சொல்லி இகழ்தற்குரியார் இவ்வுவகத்தில் யார்தான்! 'இழைத்தல்' வஞ்சினங் கூறுதல். அது இன்னது செய்யேனாயின் இன்னேனாகுக எனச் சூளுறுதல். இன்னேனாகுக என்பது என்பகைவருக்கு அடிமையாவேனாக என்பதும்,என் மீசையைக் களைந்து பெண்மைத் தோற்றத்தை மேற்கொள்வேனாக என்பதும், என் வுடமை முழுவதையும் ஒருங்கே இழப்பேனாக என்பதும், என் உயிரை விட்டு விடுவேனாக என்பதுமாகப் பலதிறப்படுவதாம். அவற்றுள் இறுதியதே இக்குறளிற் குறிக்கப்பட்டதென அறிக. ஒரு மறவன் தன் குறிக்கோளை நிறைவேற்றாது தோல்வியுறினும், தன் வஞ்சினத்தை நிறைவேற்றி விடின் அது அவன் தோல்வியை வெற்றியாக மாற்றிவிடுமாதலால், அவனை எவருங்குறை கூறுதற்கு இடமில்லையென்பதாம். சொல்லி யென்பது அவாய்நிலையால் வந்தது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சவாலை சாதிக்க தயங்கம் இல்லாமல் சாகக்கூடியவரை யார் பிழைத்தார் என்று தண்டிப்பது.

Thirukkural in English - English Couplet:


Who says they err, and visits them scorn,
Who die and faithful guard the vow they've sworn?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Who would reproach with failure those who seal their oath with their death ?.

ThiruKural Transliteration:


izhaiththadhu ikavaamaich chaavaarai yaarae
pizhaiththadhu oRukkiR pavar.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore