திருக்குறள் - 946     அதிகாரம்: 
| Adhikaram: marundhu

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

குறள் 946 - திருவள்ளுவர் - ThiruValluvar

"izhivarindhu unpaan kan inpampoal nirkum" Thirukkural 946 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறும் அளவறிந்து உண்பவன்கண் இன்பம்போல உண்டாம், மிக உண்பான்கண் நோய்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல் - அக்குறைதலை நன்று என்று அறிந்து அவ்வாறே உண்பவன் மாட்டு இன்பம் நீங்காது நிலை நிற்குமாறு போல; கழிபேரிரையான்கண் நோய் நிற்கும் - மிகப்பெரிய இரையை விழுங்குவான் மாட்டு நோய் நீங்காது நிலைநிற்கும். (அவ்வாறே உண்டல் - உண்ணலாம் அளவில் சிறிது குறையஉண்டல். இன்பமாவது வாதமுதலிய மூன்றும் தத்தம் நிலையில் திரியாமையின் மனம் மொழி மெய்கள் அவன் வயத்தவாதலும், அதனான் அறம் முதலிய நான்கும் எய்தலும் ஆம். இரையை அளவின்றி எடுத்து அதனான் வருந்தும் விலங்கொடு ஒத்தலின் 'இரையான்'என்றார். விதி எதிர்மறைகளை உவமமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல்- குறைத்துண்பதன் நன்மையைப் பட்டறிவாலறிந்து அம்முறையை நெடுகலும் கடைப்பிடிப்பவனிடத்து இன்பம் நிலைத்து நிற்பதுபோல்; கழிபெரு இரையான்கண் நோய்நிற்கும்- மிகப் பேரளவாக வுண்பவனிடத்து நோய் நிலைத்து நிற்கும், இழிவென்றது இன்றியமையாத அளவிற்கு மேற்பட்டதின் நீக்கத்தையே. இன்பமாவது உணவுச்சுவை மிகுதலும், எளிதாயியங்கி வினை செய்தலும், ஊதை பித்த கோழைகள் தத்தம் அளவில் நிற்றலால் ஒருவகை நோயுமின்மையும், ஏனையின்பங்களையும் நுகர்தலும், மனமகிழ்ச்சியுமாம். 'கழிபெரு' மீமிசைச் சொல். 'இரை' யென்பது விலங்கினுந் தாழ்ந்த பறவை யூரிகளின் உணவைக் குறிக்குஞ் சொல்லாதலால், இங்கு இழிவு குறித்து நின்றது. 'கழிபேரிரையான்' என்பதை மிடாவிழுங்கி என்பது போலக் கொள்க. 'நோய்' வகுப்பொருமை. அளவூணின் நன்மையும் மிகையூணின் தீமையும் இங்கு ஒருங்கு கூறப்பட்டன. மிகையூண் என்பது அளவு மிகுதியையன்றி வேளை மிகுதியையுங் குறிக்கும். ஒருபொழு துண்பானே ஓகியொரு நாளில் இருபொழு துண்பான்நன் றாகி-வருபொழுது முப்பொழு துண்பானேல் நோகியாம் நாற்பொழுது கப்புவான் சாகி கடிது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தேவைக்கு அதிகமாக எடுப்பது இழிவானது என்பதை அறிந்து உண்பவர் இடத்தில் நிலைத்து நிற்கும் இன்பம் போல் கட்டுப்பாடற்று உண்பவர் இடத்தில் நிலைக்கும் நோய்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அளவுக்குச் சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிற்பது போல, அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும்.

Thirukkural in English - English Couplet:


On modest temperance as pleasures pure,
So pain attends the greedy epicure.

ThirukKural English Meaning - Couplet -Translation:


As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.

ThiruKural Transliteration:


izhivaRindhu uNpaan-kaN inpampoal niRkum
kazhipaer iraiyaankaN noai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore