திருக்குறள் - 536     அதிகாரம்: 
| Adhikaram: pochchaavaamai

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.

குறள் 536 - திருவள்ளுவர் - ThiruValluvar

"izhukkaamai yaarmaattum endrum vazhukkaamai" Thirukkural 536 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யாவர்மாட்டும் எல்லாநாளும் தப்புச்செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின் அதனையொக்க நன்மை பயப்பது பிறிதொன்று இல்லை. இது முறைமை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்யவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின், அஃது ஒப்பது இல் - அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை. (வினை செய்வார் சுற்றத்தார் என்னும் தம்பாலார் கண்ணும் ஒப்ப வேண்டுதலின், 'யார் மாட்டும்' என்றும் , தாம் பெருகியஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்ப வேண்டுதலின் வழுக்காமை 'என்றும்' கூறினார். வாயின் என்பது முதனிலைத் தொழிற் பெயராக வந்த வினை எச்சம். வாய்த்தல்: நேர்படுதல்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறதியின்மை எவரிடத்தும் எப்போதும் தப்பாது வாய்க்குமாயின்; அது ஒப்பது இல் - அது போன்ற நன்மை வேறொன்று மில்லை. செய்ய வேண்டிய வினைகளை உறவினரிடத்தும் பிறரிடத்தும் ஒப்பச் செய்ய வேண்டுமாதலின் யார்மாட்டும் என்றும், பெருகிய நிலையிலும் சுருங்கிய நிலையிலும் ஒருதன்மையாகச் செய்ய வேண்டுதலின் 'என்றும்' என்றும் , எல்லா வினைகளிலும் தப்பாது கையாள வேண்டுதலின் வழுக்காமை என்றும் , கூறினார் . 'வாய்' என்னும் வினை 'வாய்ந்தன ரென்ப' (தொல். 1582) , 'வாய்ந்தமலையும்' ( குறள் . 737) என்று மெலிந்தும் புடைபெயர்தலாலும் , செயப்படு பொருள் குன்றிய வினையாதலாலும் , 'வாயி' னென்பது முதனிலைத் தொழிற்பெயரடியாக வந்த வினை யெச்சம் என்னும் பரிமேலழகர் கூற்றுப் பொருந்தாது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மறவாமைக்குணம் யாவரிடத்திலும் எக்காலத்திலும் இடையீடின்றி உண்டாகி விடுமானால், அதனையொத்த நன்மை வேறு எதுவும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நினைவை இழக்காமை யார் இடத்தில் என்றும் வழுக்காமல் இருக்கிறதோ அதற்க்கு ஒப்பானது இல்லை.

Thirukkural in English - English Couplet:


Towards all unswerving, ever watchfulness of soul retain,
Where this is found there is no greater gain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.

ThiruKural Transliteration:


izhukkaamai yaarmaattum endrum vazhukkaamai
vaayin adhuvoppadhu il.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore