திருக்குறள் - 1271     அதிகாரம்: 
| Adhikaram: kuripparivuruththal

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

குறள் 1271 - திருவள்ளுவர் - ThiruValluvar

"karappinung kaiyikanh thollaanin un kan" Thirukkural 1271 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம்படாதே நின்னைக் கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்லலுறுவதொரு காரியமுண்டாயிராநின்றது: இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது , தலைமகன் , தலைமகள் , தோழி என்ற இவர் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல் . இது பிரிந்து போய தலைமகன் வந்து கூடியவழி நிகழ்வதாகலின் ,அவர் வயின் விதும்பலின்பின் வைக்கப்பட்டது.] (பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது ஒன்று உடைத்து என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது.) கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்; ஒல்லா கை இகந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கை கடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இராநின்றது, இனி அதனை நீயே தெளியச் சொல்வாயாக. (காத்தல் - நாணால் அடக்குதல், தன்கண் பிரிதற் குறிப்புள்ளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகுதியினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது வொன்றுடைத்தென அஞ்சிய வழி , அதை யவள் குறிப்பாலறிந்து அவன் அவட்குச் சொல்லியது.) கரப்பினும்-நீ சொல்லாது மறைத்தாலும் , ஒல்லாகை இகந்து-அதற்குடம்படாது உன்கட்டை மீறி , நின் உண் கண் உரைக்கல் உறுவது ஒன்று உண்டு-உன் மையுண்ட கண்கள் எனக்குக் குறிப்பாகச் சொல்லுவதொரு செய்தியுள்ளது . இனி அதை நீயே வெளிப்படையாகச் சொல்வாயாக. தலைமகனின் வரையிறந்த பாராட்டில் மீண்டும் பிரிதற் குறிப்புள்ளதாகத் தலைமகள் கருதி வேறுபட்டதை , அவட்கெடுத்துச்சொல்லித் தன் பிரியாமையை யுணர்த்தியவாறு . கரத்தல் நாணாலடக்குதல்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மறைத்தாலும் கை நழுவி வெளிப்படுமாறு உன் கண்கள் சொல்லும் செய்தி ஒன்று உண்டு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நீதான் மறைந்தாலும், நின் மறைப்பையும் கடந்து, நின் கண்கள் எனக்குச் சொல்ல முற்படுகின்ற ஒரு செய்தியும் நின்னிடத்தில் உள்ளதாகும்.

Thirukkural in English - English Couplet:


Thou hid'st it, yet thine eye, disdaining all restraint,
Something, I know not, what, would utter of complaint.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.

ThiruKural Transliteration:


karappinung kaiyikanh thollaanin un-kan
uraikkal uruvadhon rundu.

திருத்தமிழ்
© 2025 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore