திருக்குறள் - 1021     அதிகாரம்: 
| Adhikaram: kutiseyalvakai

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

குறள் 1021 - திருவள்ளுவர் - ThiruValluvar

"karumam seyaoruvan kaidhoovaen ennum" Thirukkural 1021 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் கருமஞ்செய்தற்கு நான் ஒழியே னென்று சொல்லுகின்ற பெருமைபோலப் பெருமையுடையது பிறிது இல்லை.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின் - தன் குடிசெய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணிய கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப்பெருமை போல; ஒருவன் பீடு உடையது இல் - ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிது இல்லை. ('குடி செயற்கு' என்பது அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமச்செயலாற் செல்வமும் புகழும் எய்திக் குடி உயரும் ஆகலின், 'பீடுடையது இல்' என்றார். குடிசெய்தற் கருமமே நடத்தலால் 'தன் கருமஞ் செய்ய' என்றும், 'பிறர் கருமஞ் செய்ய' என்றும் உரைப்பாரும் உளர். தன் கருமமும் அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல் தலைமை யன்மையானும் அவை உரையன்மை அறிக.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின் தான் பிறந்தகுடியை மேன்மேலும் முன்னேற்றும் முயற்சியைக் கைவிடேன் என்னும் பெருமைபோல; பீடு ஒருவன் உடையது இல்-சிறந்த பெருமை ஒருவனுக்கு வேறொன்று மில்லை. குடிசெய்தற்கு என்பது அதிகாரத்தால் வந்தது. குடி என்பது குடும்பம் முதல் நாட்டினம் (Nation) வரை பல்வேறு அளவுள்ள மக்கள் வகுப்புகளைக் குறித்தாலும், குடிசெயல் என்பது அரசியல் போலக் காத்தலை மட்டுஞ் செய்யாது மேன்மேலுயர்த்துதலையும் மேற்கொள்ளுதலாலும், ’பெருமையிற் பீடுடைய தில்’, என்றார். ’’குடி செய்தற் கருமமே நடத்தலால் ’தன் கருமஞ் செய்யவென்று முரைப்பாரு முளர் ; தன் கருமமும் அதுவே யாகலானும், பிறரேல் செய்தல் தலைமையன்மையானும், அவையுரையன்மை அறிக.’’ என்னும் பரிமேலழகா மறுப்புக் கொள்ளத்தக்கதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


செயல்களைச் செய்ய என் கைகள் தயங்காது என்ற பெருமையைவிட மேலான ஒன்று இல்லை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘என் குடியை உயரச் செய்வதற்கான செயல்களைச் செய்வதில் ஒருபோதும் கை ஓயமாட்டேன்’ என்னும் பெருமையைப் போல, ஒருவனுக்கு சிறந்த பெருமை தருவது வேறில்லை.

Thirukkural in English - English Couplet:


Who says 'I'll do my work, nor slack my hand',
His greatness, clothed with dignity supreme, shall stand.

ThirukKural English Meaning - Couplet -Translation:


There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).

ThiruKural Transliteration:


karumam seyaoruvan kaidhoovaen ennum
perumaiyin peedutaiyadhu il.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore