திருக்குறள் - 809     அதிகாரம்: 
| Adhikaram: pazhaimai

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.

குறள் 809 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ketaaa vazhivandha kaenmaiyaar kaenmai" Thirukkural 809 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


குற்றம் உண்டாயின் அவ்விடத்து நட்பினிற் கெடாராய்க் குலத்தின்வழி வந்த நட்புடையாராது நட்பை விடுதலின்றி உலகத்தார் விரும்புவர். இது பழைமையைக் கொண்டாடுவாரை உலகத்தார் தாமும் நட்பு ஆகுதற்கு விரும்புவர் என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கெடா வழிவந்த கேண்மையார் கேண்மை - உரிமை அறாது பழையதாய் வந்த நட்பினை உடையாரது நட்பினை; விடார் உலகு விழையும் - அவர் பிழை நோக்கி விடுதல் செய்யாதாரை உலகம் நட்புக்குறித்து விரும்பும். ('கெடாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. விடாதாரை எனவே, விடுதற்காரணம் கூறப்பட்டது. 'நம்மாட்டும் இவர் இத்தன்மையராவர்' என்று யாவரும் தாமே வந்து நட்பாவர் என்பதாம். 'கெடார்' என்று பாடம் ஓதி 'நட்புத் தன்மையில் கெடாராகி' என்று உரைப்பாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கெடா வழிவந்த கேண்மையார் கேண்மை - உரிமை கெடாது பழைமையாக வந்த நட்பையுடையாரின் உறவை; விடார் - அவர் செய்த தவறு பற்றி விடாதவரை; உலகு விழையும் - உலகம் விரும்பும். கேண்மையை விடுதற்கு இருக்கக்கூடிய கரணியம் வருவித்துரைக்கப்பட்டது. உலகம் விரும்புதலாவது புகழ்ந்து போற்றுதலும் அவரோடு நட்புக் கொள்ளுதலும், 'கெடா' ஈறுகெட்ட எதிர் மறை வினையெச்சம். 'கெடாஅ', 'விடாஅர்' இசைநிறையளபெடைகள். 'கெடாஅர்' என்பது மணக்குடவ காலிங்க பரிப்பெருமாளர் கொண்ட பாடம். 'நட்பிற் கெடாராய்' என்பது மணக்குடவர் உரை. காலிங்கர் 'விடாஅர்' என்பதையும் இங்ஙனமே முற்றெச்சமாக்கி "ஒருகால் ஒழியாதே" என்று பொருளுரைப்பர். 'உலகு' ஆகுபெயர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கெடுதல் நினையாது தொடரும் நட்பை கைக்கொண்டவர் நட்பை கைவிடாமல் இருக்கவே நினைக்கும் உலகு.

Thirukkural in English - English Couplet:


Friendship of old and faithful friends,
Who ne'er forsake, the world commends.

ThirukKural English Meaning - Couplet -Translation:


They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy.

ThiruKural Transliteration:


ketaaa vazhivandha kaeNmaiyaar kaeNmai
vidaaar vizhaiyum ulagu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore