திருக்குறள் - 1019     அதிகாரம்: 
| Adhikaram: naanutaimai

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.

குறள் 1019 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kulanjudum kolkai pizhaippin nalanjudum" Thirukkural 1019 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச் சுடும்: அதுபோல நாணின்மை நிற்குமாயின் தமது நலத்தினைச் சுடும். இது நலமில்லையா மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் கெடுக்கும்; நாணின்மை நின்றக்கடை நலம் சுடும் - ஒருவன் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும். (நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவன் தன் கொள்கை தவறி யொழுகின் , அத்தவறு அவன் குடிப்பிறப்பை மட்டும் கெடுக்கும்; நாண் இன்மை நின்றக்கடை நலம் சுடும் - ஆயின் , ஒருவனிடத்து நாணின்மை நிலைத்து நின்றவிடத்தோ , அந்நிலைப்பு அவன் நலம் எல்லாவற்றையுங் கெடுத்துவிடும். கொள்கையாவது குடியுயர்வைப் பேணும் நெறிமுறை. 'நலம்.' வகுப்பொருமை . நலவகைகள்பிறப்பு, இயற்கையறிவு, கல்வி,பண்பு செயல் முதலியன.ஒழுக்கமின்மையினும் நாணின்மை மிகத் தீயது என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும். அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


குலப் பெருமை அழியும் கொள்கை தவறாக இருந்தால். நலம் கெட்டுப் போகும் நாணுடைமை இல்லாமல் நிற்கும் யாருக்கும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஒருவனது ஒழுக்கத் தவறினால், அவன் குடிப்பெருமை ஒன்றே கெட்டுவிடும்; ஒருவனிடம் நாணமில்லாத தன்மை நின்றபோது, அது அவன் நலத்தை எல்லாமே சுடும்.

Thirukkural in English - English Couplet:


'Twill race consume if right observance fail;
'Twill every good consume if shamelessness prevail.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Want of manners injures one's family; but want of modesty injures one's character.

ThiruKural Transliteration:


kulanjudum koLkai pizhaippin nalanjudum
naaNinmai nindrak kadai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore