திருக்குறள் - 535     அதிகாரம்: 
| Adhikaram: pochchaavaamai

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.

குறள் 535 - திருவள்ளுவர் - ThiruValluvar

"munnurak kaavaadhu izhukkiyaan thanpizhai" Thirukkural 535 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னாற் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் வந்துற்றகாலத்துக் காக்கலாகாமையின் அப்பிழைப்பினை நினைந்திரங்கிவிடும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


முன்னுறக் காவாது இழுக்கியான் - தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் - பின்வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும். (காக்கப்படும் துன்பங்களாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், இரங்கிவிடும் என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


முன் உறக்காவாது இழுக்கியான் - தன்னால் தடுக்கப்படவேண்டிய துன்பங்களை அவை வருமுன்பே யறிந்து தன்னைக்காவாது மறந்திருந்தவன் ; பின் ஊறு தன் பிழை இரங்கி விடும் - பின்பு அவை நேர்ந்த பொழுது தடுக்க லாகாமையின் தன்தவற்றையெண்ணி வருந்தியழிவான். காக்கவேண்டிய துன்பங்கள் ; பகைவர் சோர்வு பார்த்துச் செய்வனவும் பஞ்சம் வெள்ளம் முதலியனவுமாம் . ஊற்றின்கண் என்பது உருபுஞ் சாரியையும் உடன்தொக்கு நின்றது . விடுதல் நீங்குதல்; இங்கு அழிதல்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


முன்னமே ஆய்ந்து காக்க வேண்டியதைக் காக்காமல் செயல்பட்டவருக்கு தனது பிழையால் எதிர்க்காலம் ஏற்றம் அற்றதாய் அமையும்.

Thirukkural in English - English Couplet:


To him who nought foresees, recks not of anything,
The after woe shall sure repentance bring.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.

ThiruKural Transliteration:


munnuRak kaavaadhu izhukkiyaan thanpizhai
pinnooRu iRangi vidum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore