திருக்குறள் - 1257     அதிகாரம்: 
| Adhikaram: niraiyazhidhal

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

குறள் 1257 - திருவள்ளுவர் - ThiruValluvar

"naanena ondroa ariyalam kaamaththaal" Thirukkural 1257 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நாணென்பதொன்று அறியார் மகளிர், காமம் காரணமாக விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின். அவர் விரும்புமாறு செய்வாராயின் நாணமுண்டாகா தென்றவாறு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணியார் காமத்தாற் பெட்பசெயின் - நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம் - நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம். ('பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(பரத்தையிற் பிரிந்துவந்தவனாகக் கருதப்பட்ட தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகளை , நோக்கி நீ புலவாமைக்குக் . கரணியம் யாதென்ற தோழிக்குச் சொல்லியது) . பேணியார் காமத்தால் பெட்ப செயின்- நம்மால் விரும்பப்ட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யும்போது ; நாண் என ஒன்றோ அறியலம்- நாண் என்று ஒன்றை அறியமாட்டாதிருந்தேம். ஆசிரியர் ஒருமனை(வி)மணத்தையே இவ்வின்பத்துப் பாலிற் கூறுவதாலும் , இது தலைசிறந்த தமிழறநூலாதலாலும் , கோவைகளிற்போலப் பரத்தை கூற்றாக இங்கு ஒன்றுங் கூறப்படாமையாலும் , ' பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனோடு ' என்று பரிமேலழகர் .கொளுவிற் கூறியிப்பது பொருந்தாது . ' ஒன்று ' என்பது ஒரு தனிப்பொருள் என்னும் பொருட்டு . ஒகாரம் பிரிநிலை . ' அறியலம் ' என்பது உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாயின் , தன் குற்றத்தைக் குறைத்தற்குத் தோழியையும் உளப்படுத்திக் கொண்டதாகக் கொள்க . செயப்பாட்டு வினைமுதல் ' பேணியார் ' எனச் செய்வினை முதல் வடிவில் நின்றது . ' நாண் ' பரத்தையர் தோய்ந்ததாகக் கருதப்பட்ட மார்பைத் தோய்தற்கு நாணுதல் . 'பெட்ப' வேட்கை மிகுதியாற் கருதியிருந்த கலவிவினைகள் . ' அறியலர் ' . 'பெட்பச் செயின் ' எனபன மணக்குடவ பரிப்பெருமாளர் கொண்ட பாடம் .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நாணம் என்ற ஒன்றை அறியாமல் போகலாம் காமத்துடன் நமக்கு வேண்டியதை பேணுபவர் பெறச் செய்தால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நாம் விரும்பிய காதலரும், காமத்தால் நமக்கு வேண்டியவற்றைச் செய்தாரானால், நாமும் ‘நாணம்’ என்று குறிக்கப்படும் ஒன்றையும் அறியாதேயே இருப்போம்.

Thirukkural in English - English Couplet:


No sense of shame my gladdened mind shall prove,
When he returns my longing heart to bless with love.

ThirukKural English Meaning - Couplet -Translation:


I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).

ThiruKural Transliteration:


naanena ondroa ariyalam kaamaththaal
paeniyaar petpa seyin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore