திருக்குறள் - 959     அதிகாரம்: 
| Adhikaram: kutimai

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

குறள் 959 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nilaththil kidandhamai kaalkaattum kaattum" Thirukkural 959 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும். அதுபோல உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் - நிலத்தினியல்பை அதன் கண் முளைத்த முளை காட்டும்; குலத்திற்பிறந்தார் வாய்ச் சொல் காட்டும் - அதுபோலக் குலத்தின் இயல்பை அதன் கண் பிறந்தார் வாயிற் சொல் காட்டும். (கிடந்தமை உள்ளபடி முளைத்தமாத்திரத்தானே நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய கூறாராயினார். ஆகவே, பொருளினும் செயல் முதலியன வேண்டாவாயின. குலத்து இயல்பு அறிதற்கருவி கூறுவார் போன்று, இன்சொல் வேண்டுமென்றவாறாயிற்று.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்- நிலத்தின் இயல்பை அதில் முளைத்த விதையின் முளை தெரிவிக்கும்; குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல் காட்டும்- அதுபோல குலத்தின் இயல்பை அதிற் பிறந்தவர் உரைக்குஞ் சொல் தெரிவிக்கும். "விளையும் பயிர் முளையில் தெரியும்". அதனால் அது நன்னிலத்தில் முளைத்தமை அறியப்படும். முளை நலமே விளை நிலத்தைத் தெரிவித்தல்போல், மக்களின் சொன்னலமே அவர் செயல்நலத்தையும் தெரிவிக்கும். "மாற்றமுரைக்கும்வினைநலம்." (நான்மணி43) 'கிடந்தமை' இருந்த நிலைமை. நிலம், குலம், கால்,சொல் என்று பொதுப்படச் சொன்னமையால், முளை நலமின்மை நிலத்தின் புன்மையையும் சொன்னலமின்மை குலத்தின் இழிவையும் காட்டும் என்பதும், பெறப்படும். "குலத்தளவே யாகுங் குணம்" என்றார் ஒளவையார். குலத்தின் இயல்பை என்பது அவாய் நிலையால் வந்தது. இக்குறளில் உள்ள அணி எடுத்துக் காட்டுவமை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


என்ன மாதரியான நிலத்தில் இருந்தார் என்பதை கால் காட்டிவிடும் அதுபோல் குலத்தின் தன்மையை வாய்ச்சொல் காட்டும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நிலத்தின் இயல்பினை அதனிடம் முளைத்த முளை காட்டும்; அவ்வாறே, நல்ல குலத்தில் பிறந்தவர்களது இயல்பினை அவர் வாய்ச்சொற்கள் எடுத்துக் காட்டும்.

Thirukkural in English - English Couplet:


Of soil the plants that spring thereout will show the worth:
The words they speak declare the men of noble birth.

ThirukKural English Meaning - Couplet -Translation:


As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth).

ThiruKural Transliteration:


nilaththil kidandhamai kaalkaattum kaattum
kulaththil piRandhaarvaaich chol.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore