திருக்குறள் - 573     அதிகாரம்: 
| Adhikaram: kannottam

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.

குறள் 573 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pan ennaam paatarku iyaipindrael kan ennaam" Thirukkural 573 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பண் என்ன பயனுடைத்தாம், பாடலொடு பொருந்தாதாயின். அதுபோலக் கண் என்ன பயனுடைத்தாம், கண்ணோட்ட மில்லாத காலத்து. இது பிறர்க்கும் இன்பம் பயவாதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் - பண் என்ன பயத்ததாம் பாடல் தொழிலோடு பொருத்தமின்றாயின்; கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் - அதுபோலக் கண் என்ன பயத்ததாம் கண்ணோட்டமில்லாத இடத்து. ('பண்', 'கண்' என்பன சாதிப்பெயர், பண்களாவன: பாலையாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல் தொழில்களாவன: யாழின்கண் வார்தல் முதலிய எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும், பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம். இவற்றோடு இயையாதவழிப் பண்ணால் பயன் இல்லாதவாறுபோலக் கண்ணோட்டத்து இயையாத வழிக் கண்ணால் பயனில்லை என்பதாம். கண் சென்ற வழி நிகழ்தல் பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கண் 'கண்' என்பதனைக் 'கண்ணகல் ஞாலம்' (திரிகடுகம் 1) என்புழிப் போலக் கொள்க.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பாடற்கு இயைபு இன்றேல் பண்என் ஆம்- பாடுதற்குப் பொருத்தமில்லையெனின் பண்ணால் என்ன ஆகும் ?; கண்ணோட்டம் இல்லாத கண் கண் என் ஆம் -அதுபோலக் கண்ணோட்டமில்லாத விடத்துக் கண்ணால் என்ன பயனாம்? கண்பார்வையின் சிறந்த பயன் கண்ணோட்டமே என்பது கருத்து. பண் என்பது இசைவகை. அது பாலையாழ் முதலிய நாற்பெரும் பண்ணின் வகையான நூற்று மூன்று பண்களின் விரியாக நரப்படைவா லுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகள். (சிலப்.அரங்.45, அருஞ்சொல்லுரை). அவை ஏழும் ஆறும் ஐந்தும் நான்கும் ஆக முரல்(சுரம்)உடைமைபற்றி, பண்(சம்பூரணம்), பண்ணியல்(ஷாடவம்), திறம்(ஒளடவம்), திறத்திறம்(சுராந்தியம்) என நால்வகைப் பாகுபாடுடையன. பாடற்றொழில்கள்: "சிச்சிலி பூனை குடமுழக்கஞ் செம்மைத்தா முச்சிமலை நீர்விழுக்கா டொண்பருந்து - பச்சைநிற வேயினிலை வீழ்ச்சியுடன் வெங்கா னிழற்பறவை யேயுங்கா லோசை யியம்பு". "உள்ளாளம் விந்து வுடனாத மொலியுருட்டுத் தள்ளாத தூக்கெடுத்தல் தான்படுத்தல் - மெள்ளக் கருதி நலிதல் கம்பித்தல் குடிலம் ஒருபதின்மே லொன்றென் றுரை." (இசைமரபு) "கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா பண்ணளவும் வாய்தோன்றா பற்றெரியா - எண்ணிலிவை கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந்திருவ ருள்ளாளப் பாடலுரை". (இசைமரபு) என்பவற்றால் அறியப்படும். நாதம் -அரவம். கம்பிதம் - நடுக்கம். இசைக்கருவிகளுள் தலைமையான யாழை இயக்கும் முறைகள் பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல் , தைவரல் , செலவு , விளையாட்டு, கையூழ் ,குறும்போக்கு என்னும் எண்வகை இசையெழாலும் ; வார்தல் , வடித்தல் ,உந்தல் ,உறழ்தல் , உருட்டல் , தெருட்டல் , அள்ளல் , பட்டடை என்னும் எண்வகைக் கரணமுமாம். கண்கண்ட வழி நிகழ்தலாற் கண்ணோட்டத்தைக் கண்ணின் பண்பாகக் கூறினர். இறுதியிலுள்ள 'கண்' காலங்குறித்து வந்த இடப்பெயர்.பண் பாடற்கியைபின்மை , ஆளத்தி (ஆலாபனை) செய்ய முடியாவாறும் இன்பந்தராவாறும் ஆரோசை அமரோசைகளில் (ஆரோக அவரோகணங்களில்) பகைமுரல் கலப்பதால் நேர்வதாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


பாடுவதற்குப் பொருத்தமில்லாமற் போனால் பண் என்ன பயனை உடையதாகும்? அதுபோலவே கண்ணோட்டமில்லாத கண் என்ன பயனை உடையதாகும்?.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பண் (ராகம்) எதற்கு பாட்டிற்கு இசையவில்லை என்றால், கண் எதற்கு பார்த்தறிதல்(பக்குவமடைதல்) இல்லாத கண் என்றால்.

Thirukkural in English - English Couplet:


Where not accordant with the song, what use of sounding chords?
What gain of eye that no benignant light affords?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.

ThiruKural Transliteration:


paN-ennaam paataRku iyaipindrael kaN-ennaam
kaNNoattam illaadha kaN.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore