திருக்குறள் - 1258     அதிகாரம்: 
| Adhikaram: niraiyazhidhal

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

குறள் 1258 - திருவள்ளுவர் - ThiruValluvar

"panmaayak kalvan panimozhi androa nam" Thirukkural 1258 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பலபொய்களையும் பேசவல்ல கள்வனது தாழ்ந்த மொழியல்லவோ நமது பெண்மையை அழிக்குங் கருவி?. இது பெண்மையல்ல என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் நம் பெண்மையைக் கெடுக்கின்றது: அல்லது கெடாதென்று தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) நம் பெண்மை உடைக்கும் படை - நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக் கள்வன் பணிமொழியன்றோ - பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை? (பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக்கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக்கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பன்மாயக்கள்வன்' என்றாள். பணிமொழி - தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். 'அவன்அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாயது ஒழியுமோ'? என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) நம் பெண்மை உடைக்கும் படை-நம் நிறையாகிய அரணை யழிக்கும் படைக்கலம் ; பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோ-பல நடிப்புச் செயல்களில் வல்ல கள்வராகிய நம் காதலரின் தாழ்மையான பேச்சன்றோ ? வந்தாற்்புலக்கவேண்டுமென்றும் , அப்புலவியை நீக்க அவர் சொல்லுஞ்சொற்களையும் செய்யுஞ்செயல்களையும் பொருட்படுத்தக் கூடாதென்றும் ' நான் கொண்டிருந்த தீர்மானத்தை அடியோடு மறந்து, கலவிக்கண் அவரினும் முற்படும் வகை்பசப்பி மயக்கிவிட்டார் என்பாள் ' பன்மாயக் கள்வன் ' என்றாள் . 'பணிமொழி ' எத்துணைக் கடுஞ்சினத்தையும் எளிதில் தணிக்கும் இனிமையும் தாழ்மையுங் கலந்த வசியச் சொற்கள் . அத்தகைத் திறமையொடு அத்தகைச் சொற்களைச் சொல்லும்போது , என்நிறை யழியாது வேறென் செய்யும் என்பதாம் . ' பெண்மை ' இங்குத்தலைமைபற்றி நிறைமேல் நின்றது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பலவிதமான மாயத்தை செய்யும் கள்வன் பணிவாக பேசியே வார்த்தை அன்றோ நம் பெண்மை உடைக்கும் படை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய காதலனின் பணிவான சொற்கள் அல்லவோ, அன்று, தம் பெண்மை என்னும் அரணை உடைக்கும் படையாய் இருந்தன.

Thirukkural in English - English Couplet:


The words of that deceiver, versed in every wily art,
Are instruments that break through every guard of woman's heart!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?.

ThiruKural Transliteration:


panmaayak kalvan panimozhi androa-nam
penmai udaikkum padai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore