திருக்குறள் - 61     அதிகாரம்: 
| Adhikaram: pudhalvaraip perudhal

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

குறள் 61 - திருவள்ளுவர் - ThiruValluvar

"perumavatrul yaamarivadhu illai" Thirukkural 61 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் பெறும் பொருள்களுள் அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது: ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண்டறிவதில்லை.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படுங் கடன் மூன்றனுள் முனிவர் கடன்கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின் ,அக்கடன் இறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல்.அதிகார முறைமை மேலே பெறப்பட்டது.] பெறுமவற்றுள் - ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற - அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை - யாம் மதிப்பது இல்லை. ('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், 'அத்துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தால் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பெறு மவற்றுள்-இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல - அறியத்தக்க நூல்களை அறியக்கூடிய பிள்ளைப்பேறு அல்லாத;பிற - வேறு சிறந்தவற்றை, யாம் அறிவதில்லை - யாம் அறிந்ததில்லை. அறிவு என்பது அறிவைத்தரும் நூலைக் குறித்தலால் கருமிய, (காரிய) வாகுபெயர். அறிந்த என்பது தேற்றம் பற்றிய காலவழுவமைதி. பெற்றோர், பேறுகாலம் என்னும் இருசொற்களும் பிள்ளைப் பேற்றின் தலைமையை எடுத்துக் காட்டும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் பெறுகின்ற செல்வங்களும் அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய சிறந்த மக்களைப் பெறுவது போன்ற மற்றச் செல்வங்களை யாம் மதிப்பது இல்லை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அடையவேண்டியவற்றுள் நான் அறிவது இல்லை அறிவுடைய குழந்தைகள் தவிர வேறொன்று.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பெறுகின்ற செல்வங்களாகிய அவற்றுள், அறிவறிந்த மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாக, பிற எதனையும் யாம் கருதுவதில்லை.

Thirukkural in English - English Couplet:


Of all that men acquire, we know not any greater gain,
Than that which by the birth of learned children men obtain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.

ThiruKural Transliteration:


peRumavatruL yaamaRivadhu illai aRivaRindha
makkatpaeRu alla piRa.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore