திருக்குறள் - 297     அதிகாரம்: 
| Adhikaram: vaaimai

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

குறள் 297 - திருவள்ளுவர் - ThiruValluvar

"poiyaamai poiyaamai aatrin arampira" Thirukkural 297 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின் பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - ஒருவன் பொய்யாமையையே, பொய்யாமையையே செய்ய வல்லவனாயின், பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று (அடுக்கு இரண்டனுள் முதலது இடைவிடாமை மேற்று, ஏனையது துணிவின் மேற்று. 'பல அறங்களையும் மேற்கொண்டு செய்தற்கு அருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையும் தானே தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமல் செய்தல் நன்று 'என்பார், 'செய்யாமை செய்யாமை நன்று' என்றார்.இதனை இவ்வாறு அன்றிப் 'பொய்யாமையைப் பொய்யாமல் செய்யின் பிற அறம் செய்கை நன்று',எனப் பொழிப்பாக்கி, 'பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாது' என்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும் உளர். பிற அறங்களெல்லாம் தரும் பயனைத் தானே தரும் ஆற்றலுடைத்து என மறுமைப்பயனது மிகுதி இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொய்யாமை பொய்யாமை ஆற்றின்- ஒருவன் வாய்மை யறத்தைத் தொடர்ந்து செய்ய வல்லவனாயின்; பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று- அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தலே நன்றாம். அடுக்குத்தொடர் இரண்டனுள் முன்னது தொடர்ச்சி பற்றியது; பின்னது தேற்றம் பற்றியது. வாய்மை யொன்றே எல்லாவறங்களின் பயனையுந் தருவதாலும் எல்லா வறங்களையும் ஒருவன் மேற்கொள்ளுதல் அரிதாதலாலும், பல வறங்களை ஒருங்கே மேற்கொள்ளின் அவற்றுட் சில தவறுவதால் ஏனையவற்றின் பயனையும் ஏனையறங்களின் பயனையும் பெறுவதே சிறந்ததாகும் என்பதையுணர்த்த 'அறம்பிற செய்யாமை நன்று' என்றார். வாய்மையைக் கடைப்பிடிப்பவன் தான் செய்யுந் தீவினைகளையெல்லாம் பிறருக்கு மறைக்காதிருக்க வேண்டுமாதலானும் அவை பிறரால் அறியப்படின் தான் தண்டனை யடைவது திண்ணமாதலாலும், ஒவ்வொன்றாக எல்லாத் தீவினைகளையும் விட்டுவிடுவன் என்பது கருத்து. மணக்குடவர் ஈரடுக்குத் தொடர்களையும் தழாத் தொடராகக் கொள்ளாது தழுவு தொடராகக் கொண்டு "பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின், பிற அறங்களைச் செய்தல் நன்றாம் அல்லது தீதாம்" என்று இக் குறளுக்குப் பொருளுரைப்பர்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் பொய்யாமையையே பொய்யாமையையே செய்யும் ஆற்றல் பெற்றுவிட்டால், அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நல்லதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொய்மையை பொய்யாக்கி வாழ்ந்தால் மற்ற அறச்செயல்கள் செய்யாமலேயே நன்மை தரும்.

Thirukkural in English - English Couplet:


If all your life be utter truth, the truth alone,
'Tis well, though other virtuous acts be left undone.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.

ThiruKural Transliteration:


poiyaamai poiyaamai aatrin aRampiRa
seyyaamai seyyaamai nandru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore