திருக்குறள் - 986     அதிகாரம்: 
| Adhikaram: saandraanmai

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

குறள் 986 - திருவள்ளுவர் - ThiruValluvar

"saalpirkuk kattalai yaadhenin thoalvi" Thirukkural 986 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


சால்பாகிய பொன்னினளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாதெனின், அது தம்மினுயர்ந்தார் மாட்டுக் கொள்ளுந் தோல்வியை இழிந்தார் மாட்டுங் கோடல்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சால்பிற்குக் கட்டளை யாது எனின் - சால்பாகிய பொன்னின் அளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின்; தோல்வி துலை அல்லார்கண்ணும் கொளல் - அது தம்மின் உயர்ந்தார் மாட்டுக் கொள்ளும் தோல்வியை இழிந்தார் மாட்டும் கோடல். (துலை - ஒப்பு. எச்ச உம்மையான் இருதிறத்தார் கண்ணும் வேண்டுதல் பெற்றாம். கொள்ளுதல் - வெல்லும் ஆற்றலுடையராயிருந்தே ஏற்றுக் கொள்ளுதல். இழிந்தாரை வெல்லுதல் கருதித் தம்மோடு ஒப்பித்துக் கொள்ளாது, தோல்வியான் அவரினும் உயர்வராயின், அதனால் சால்பளவு அறியப்படும் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


சால்பிற்க கட்டளை யாது எனின் - சான்றாண்மை யென்னும் பொன்னின் மாற்றை யறியதற்கு உரைகல்லாகிய செயல் எதுவெனின் ; துலை அல்லார்கண்ணும் தோல்வி கொளல் - தம்மினும் வலியாரிடத்துத் தாம் அடையுந் தோல்வியைத் தம்மினும் மெலியாரிடத்துமே விரும்பி ஏற்றுக் கொள்ளுதல். துலை ஒப்பு. 'துலையல்லார்' என்னும் பகைவர்நிலையாலும் 'கொளல்' என்னும் வினையினாலும், தாமே விட்டுக் கொடுத்து வேண்டுமென்றே தோல்வியடைந்து கொள்ளுதல் பெறப்பட்டது. இது, வளர்ந்தவனொருவன் ஒரு குழந்தை தன்னை அடிக்கும்பொழுது, அதைப் பொறுத்துக் கொள்வது அல்லது விரும்பியேற்றுக்கொள்வது போல்வது. வலியொத்த பகைவர் வெல்வதற்கு இடமிருத்தலின், அவரிடம் ஏற்றுக்கொள்ளும் தோல்வியாற் சால்பு வெளிப்படாமை நோக்கித் ' துலையல்லார்கண்' என்றார். உம்மை இழிவு கலந்த எச்சம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சான்றாண்மைக்கு வரையறை யாதெனில் தோல்வியை ஏற்க தகுதியற்றவர் இடத்திலும் ஏற்றுக் கொளல்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


சால்பாகிய பொன்னின் தரத்தை அறிவதற்கான உரைகல், தம்மினும் உயர்ந்தாரிடம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.

Thirukkural in English - English Couplet:


What is perfection's test? The equal mind.
To bear repulse from even meaner men resigned.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.

ThiruKural Transliteration:


saalpiRkuk kattaLai yaadhenin thoalvi
thulaiyallaar kaNNum koLal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore